×

பெரம்பலூர் நெடுஞ்சாலைகளில் கத்தியை காட்டி மிரட்டி 2 பைக்குகளை பறித்து சென்ற 6 வழிப்பறி திருடர்கள்

பெரம்பலூர், மே 1: பெரம்பலூர் ஊரகக் காவல் நிலைய எல்லையில், ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் அருண்(20). நேற்று இவர் பெரம்பலூர் – துறையூர் நெடுஞ்சாலையில் குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 6 நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, அருணிடமிருந்து அவரது பைக்கினை பறித்துள்ளனர். பின்னர் அவர்கள் அந்த பைக்கில் ஏறி தப்பி சென்றனர்.

அதேபோல் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு காவல் நிலைய எல்லையில் வாலிகண்டபுரம் அடுத்த வல்லாபுரம் அருகே பைக்கில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் வினோத்குமார்(20) என்பவரது பைக்கினை 6 பேர்களைக் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். பின்னர் அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி வினோத்குமாரின் பைக்கை பறித்துச் சென்றனர்.

இதில் முதல் சம்பவமான பெரம்பலூர் – துறையூர் சாலையில் பாளையம் பகுதியில் பறித்து சென்ற பைக்கில் பெட்ரோல் இல்லாததால் பைக் திருட்டு கும்பல் மங்களமேடு கிராமம் அருகே அந்த பைக்கினை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். திருடப்பட்ட பைக்குடன், பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போட கொண்டு சென்றால், அங்குள்ள சிசிடிவி கேமராவில், தங்கள் முகம் பதிவாகி விடும் என பைக் வழிபறி திருடர்கள் சுதாரித்துள்ளனர்.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு பகுதியில் திருடிய பைக்கை நிறுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர் எனத் தெரிய வருகிறது. அந்த பைக்கினை மங்களமேடு போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேற்படி சம்பவங்கள் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Perambalur highways ,Perambalur ,Ravi ,Arun ,Sencheri village ,Alampadi panchayat ,Perambalur-Thuraiyur highway ,Palayam ,Kurumbalur ,
× RELATED பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டு...