மதுரை: மருத்துவ கல்லூரி பேராசிரியர்களுக்கான பணி நாட்களை 300 நாட்களாக நிர்ணயித்து, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட புதிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மதுரை அரசு மருத்துவக்கல்லூரியின் உதவிப் பேராசிரியர்கள் டாக்டர் இளமாறன், கீர்த்திகா ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: 2026 மார்ச் மாதம் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட புதிய திருத்தத்தில், 75 சதவீதம் வருகைப்பதிவைக் கணக்கிடுவதற்கு மொத்தம் 300 வேலைநாட்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு வாராந்திர விடுமுறைகள் சனி, ஞாயிறு மற்றும் ஆண்டுக்கு சுமார் 23 பொது விடுமுறை நாட்கள் உள்ளன. 300 நாட்களில் 75 சதவீதம் வருகை என்பது 225 நாட்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்பதாகும். ஆனால், விடுமுறை நாட்களைக் கழித்துப் பார்த்தால், ஒரு பேராசிரியருக்கு சட்டப்பூர்வமாகக் கிடைக்கும் விடுப்புகளைக் கூட எடுக்க முடியாத நிலை ஏற்படும். தமிழ்நாடு விடுப்பு விதிகளின்படி அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு போன்ற உரிமைகள் உள்ளன.
300 நாட்கள் கணக்கீட்டைப் பின்பற்றினால், ஒரு மருத்துவர் தங்களுக்குரிய சட்டப்பூர்வ விடுப்புகளை எடுத்தாலே, அவர்களது வருகைப்பதிவு 75 சதவீதத்திற்குக் கீழ் குறைந்து விடும் அபாயம் உள்ளது. எனவே இந்தச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, 300 நாட்கள் வருகைப்பதிவைக் கணக்கிடும் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட திருத்தப்பட்ட விதியை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அந்த குறிப்பிட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர், மருத்துவ கல்லூரி பேராசிரியர்களுக்கான ஆண்டுப் பணி நாட்களை 300 நாட்களாக நிர்ணயித்து, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட புதிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
