×

புதுச்சேரியில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி இல்லை: கருத்துக்கணிப்பு முடிவால் ரங்கசாமி கலக்கம்

 

புதுச்சேரி: புதுச்சேரியில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி இல்லை என்ற பெரும்பாலான கருத்துக் கணிப்புகளின் முடிவால் முதல்வர் ரங்கசாமி கலக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஏப்.9ம்தேதி நடைபெற்றது. இதில் இதுவரை இல்லாத வகையில் 91.23 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைத்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4ம்தேதி நடைபெற உள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேஜ அணியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக, லஜக கட்சிகளும், இந்தியா கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விசிக இணைந்து போட்டியிட்டன. இதுதவிர தவெக தனி அணியாகவும், நாதக தனித்தும் போட்டியிட்டன. இருப்பினும் பிரதான 2 கூட்டணிகள் இடையே 2 முனை போட்டியே புதுச்சேரியில் நிலவின. 5 மாநில தேர்தல் முடிவடைந்த நிலையில், நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் வெளியாகின.

இதில் புதுச்சேரி மாநிலத்தில் தேஜ அணிக்கு 34 முதல் 36 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனவும், இந்தியா கூட்டணிக்கு 30 முதல் 32 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனவும் தனியார் நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது. அதேபோல் தேஜ அணி ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவில் தெரிவித்துள்ள நிலையில் என்ஆர் காங்கிரசுக்கு 10 முதல் 12 இடங்களும், பாஜகவுக்கு 5 முதல் 6 இடங்களும், லஜகவுக்கு 1 முதல் 2, அதிமுகவுக்கு 1 இடமும் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது. அதேபோல் திமுக 6 முதல் 8 இடங்களையும், காங்கிரஸ் 1 முதல் 3 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தவெக அணிக்கு 1, சுயேச்சைகள் 1 முதல் 2 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளன. இதே முடிவுகளைதான் பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும் வெளியிட்டுள்ள நிலையில் என்ஆர் காங்கிரஸ் வட்டாரங்கள் அதிர்ச்சியில் உள்ளன.

ஏற்கனவே கடந்த 2021 தேர்தலில் 10 இடங்களில் வெற்றிபெற்ற என்ஆர் காங்கிரஸ் ஆட்சியமைக்க பாஜக சுயேச்சைகளை இழுத்து கடும் நெருக்கடி கொடுத்தது. திட்டங்களை நிறைவேற்றுவதில் முட்டுக்கட்டை போட்டது. தற்போதைய தேர்தல் கருத்துக் கணிப்பில் எந்தவொரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால் முதல்வர் ரங்கசாமி கலக்கத்தில் உள்ளாராம். காரணம், புதுச்சேரி தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தேஜ கூட்டணியே ஆட்சியமைக்கும் என தெரிவித்தனர். ஆனால் தங்களது அணி வெற்றிபெற்றால் ரங்கசாமிதான் முதல்வர் என தெரிவிக்கவில்லை.

இதனால் இந்த முறையும் பாஜ தயவால் காலம் ஓட்ட வேண்டி இருக்குமோ என்று தட்டாஞ்சாவடி, மங்கலம் என 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள முதல்வர் ரங்கசாமி கலக்கத்தில் இருக்கிறாராம். புதுச்சேரிக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற 1964 முதல் தற்போது வரையிலும் கட்சித் தாவல், ஆட்சி கவிழ்ப்பு மற்றும் அவசரநிலை பிரகடனம் போன்ற காரணங்களால் இதுவரை 7 முறை குடியரசு தலைவர் ஆட்சி அமலாகி உள்ளது. குறிப்பாக சுயேச்சை, கூட்டணி கட்சிகளின் அந்தர் பல்டியால் தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை ஏற்கனவே 2, 3 முறை புதுச்சேரி சந்தித்த வரலாறும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Puducherry ,Rangasamy ,Chief Minister ,
× RELATED அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன்...