×

பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்டதை திரும்ப பெற காங்கிரஸ் எம்பி சுதா வலியுறுத்தல்: விதிமீறல் இல்லை பார்கவுன்சில் விளக்கம்

சென்னை: பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி சுதா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் எம்பியும் வழக்கறிஞருமான ஆர்.சுதா கூறும்போது, முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக இருந்த பேரறிவாளன், பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தநாள் ஒரு கருப்பு நாளாகும். அவரை வழக்கறிஞராக பதிவு செய்த பார் கவுன்சில் உறுப்பினர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

பேரறிவாளன் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி. உச்ச நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டாலும் இது ஒரு தவறான முன்னுதாரணமாகியுள்ளது. இதுகுறித்து ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் புகார் அனுப்பி உள்ளேன். பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நேரத்தில் இதுபோல பதிவு நடந்துள்ளது. எனவே, பேரறிவாளன் பதிவை திரும்ப பெற வேண்டும். கருணை மனு மூலம் தான் அவர் விடுதலையாகி உள்ள நிலையில் அவரை வழக்கறிஞராக பதிவு செய்தது பார் கவுன்சில் விதிகளுக்கு எதிரானது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், பேரறிவாளனை பார்கவுன்சிலில் பதிவு செய்ததில் எந்த சட்ட மீறலும் இல்லை என்று தமிழ்நாடு பார்கவுன்சில் பதிவுக் குழு தலைவர் கே.பாலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவுசெய்து தொழில் செய்வதற்கு சட்டத்தில் எந்த தடையும் இல்லை. இந்திய வழக்கறிஞர்கள் சட்டம் பிரிவு 24 ஏ ஒருவர் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, அதற்குரிய தண்டனையை அனுபவித்து முடித்து 2 ஆண்டுகளுக்கு பிறகு வக்கீல்களாக பதிவு செய்யலாம் என்று கூறுகிறது.

அதன் அடிப்படையில் பேரறிவாளன் முறைப்படி சட்டக்கல்வி பயின்று, பிறகு பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்ய விண்ணப்பித்தார். அவர் 2022ம் ஆண்டு விடுதலை ஆனார். அவரது விண்ணப்பம், அலுவலக குறிப்பு ஆகியவை பார் கவுன்சில் பதிவு குழுவால் பரிசீலிக்கப்பட்டது. அதன்படி, அவர் வழக்கறிஞராக பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டார். இதில் எந்த சட்டவிதிமீறலும் இல்லை. இதேபோன்று பல ஆயுள் தண்டனை கைதிகள், அரசு அலுவலராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள், தண்டனை காலம் முடிந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு வக்கீலாக பதிவு செய்யப்பட்டு தற்போது வழக்கறிஞர்களாக பணியாற்றி வருகின்றனர் என்றார்.

Tags : Congress ,Sudha ,Perarivalan ,Bar Council ,Chennai ,R. Sudha ,Rajiv Gandhi ,Bar Council… ,
× RELATED பிரபந்தம், ஸ்தோத்திர பாடல் பாடுவதில்...