பகுதி 2
ராணா அந்த அளவில் திருப்தி அடைந்தார்.ராணி மீரா-பக்தை மீராவாக மேவார் திரும்பினார். ராணாவின் பக்தியும் அதிகரித் தது. அந்தப்புரத்தில் இருந்த கிரிதாரியின் கோவில், எந்நேரமும் பக்தர்களால் சூழப்பட்டிருந்தது. இப்படிச் சில காலம் மேவாரிலே, தன் குடிமக்களுக்கு உபதேசம் செய்யும் மீராவாக விளங்கினாள் மீரா.
கண்ணன் திருவாவதார நாள் வந்தது அன்று கிரிதாரி கோவில் ஒரே கோலாகலமாக இருந்தது.கோவில் முழுவதும் தீப அலங்காரங்களினால் ஒளி வீசிக் கண்டிருந்தது. அங்கங்கே நாமாவளிகளின் கோஷமும் வாத்தியங்களின் ஓசையும் ஒன்றை ஒன்று மிஞ்சி நின்றன. கிரிதாரியின் திவ்ய மங்கள விக்கிரகம் அற்புதமான ஆபரணங்களினாலும் மலர் மாலைகளி னாலும் சோபித்துக் கொண்டிருந்தது. கிரிதாரி திருமுகத்தின் உதடுகளில் புன்முறுவல்; கண்களில் அருள்நோக்கு; கைகளில் புல்லாங்குழல்.
இப்படி மனமோக வேணுகோபாலனாகக்காட்சி தந்தார் கிரிதாரி. வலது கரத்தில் தம்பூராவும் இடது கரத்தில் கரதாளம் எனப்படும் சிப்ளாவுமாக மெய்மறந்து பாடிக்கொண்டிருந்தாள் மீரா. அற்புதமான கனடா ராகத்தில் எழுந்த `தாஸமீரா லால கிரிதர’ எனும் கவிதையைப்பாடி மெய்மறந்து நர்த்தனம் செய்து கொண்டிருந்தார்; அந்தப் பாடல் துரித காலத்தில் நடந்தது. அந்த உச்சகட்டத்தில் மீராவின் குரல் ஒலி அந்த மகாமண்டபம் முழுதும் நிரம்பியது.
இப்படி எவ்வளவு நேரம் போனதோ தெரியாது. ராணா மீராவை நெருங்கி,“மீரா அரண்மனைக்குத் திரும்பலாமா?’’ எனக் கேட்டார். அவர்குரல் மிகவும் கனிந்த கனிபோலக் குழைந்திருந்தது.
மீராவும் கண்களில் கண்ணீர் வழிய, கரதாளம் நின்றது; குயிலினும் இனிய குரலில்,“ராணாஜி! இந்த உடம்பிற்கு நாதன் நீங்கள்தான். ஆனால் என் இதயநாதன் கண்ணன். இன்று என்னை ஆட்கொள்ள முடிவு கொண்டான். தங்களைப் போன்ற பரம பக்தரான, பக்திவழிக்கே துணைவரை நான் வணங்குகின்றேன். நாம் இருவரும் சேர்ந்துசெய்த கவிகளை
பாடுவோம்’’ என்றார்.
ராணுவின் உள்ளம் குழைந்தது. ராணாவின் கம்பீரமான சாரீரத்தில் இருந்து கான அமுதம் பிறந்தது. மீராவும் ராணாவும் கண்மூடி மௌனியாகி அந்த இன்பத்திலே மெய்மறந்த நிலையில் நெடுநேரம் இருந்தார்கள். நாமாவளி முடிந்ததும் கண்களை திறந்தார் ராணா.அப்போது மெய் மறந்த நிலையில் இருந்த மீரா, ராணாவின் மலரடிகளுக்கு அருகே சுருண்டு விழுந்தார். மீராவின் வாய் “கிரிதாரி! என்னை அழைக்கின்றாயா? இதோ வந்து விட்டேன்! வந்து விட்டேன்!’’ என்று முணுமுணுத்தது; மெள்ள எழுந்து கர்ப்ப கிரகத்தை நோக்கி இரண்டடி வைத்த மீரா, இறைவனது விக்கிரகத்தைத் தழுவிக் கொண்டார்.
ஒரு வினாடி நேரம்தான்; ஒரு மின்னல் மின்னியது; ஓர் ஒளிவட்டம், அதன் நடுவே கண்ணனைத் தழுவிய கோலத்துடன் காட்சி தந்தார் மீரா. மறு வினாடி கர்ப்பகிரகத்தின் கதவுகள் தாமாகவே மூடிக்கொண்டன. சற்று நேரம் கழித்து கர்ப்ப கிரகத்தைத் திறந்து பார்த்தபோது, மீராவின் உடல் மறைந்து விட்டது. மீராவின் சேலை மட்டும் கண்ணனைச் சுற்றிக்கிடந்தது. அற்புதமான வேணுகானமும் அதன் கூடவே மீராவின் இனிய குரலும் கேட்டன.
அடியற்ற மரம்போலத் தரையில் விழுந்து பணிந்தார் கும்ப ராணாமீரா மறைந்து போனார்.ஆனால் அவருடைய அமுதமயமான கவிதைகள் – பாடல்கள், பாரதநாட்டை விட்டு மறைந்துபோக முடியுமா? மீராபாயும் கும்பராணாவும் நம் நெஞ்சமே கோவிலாக க்கொண்டு விட்டார்கள். மீராவின் அருமையான கவிதைகள் – அருமையான உபதேசங்கள்! மீராவின் தூய்மையான பக்தியை வேண்டுவோம்! கிரிதாரி அருள்வார்!
V.R.சுந்தரி
