திருமழிசை, ஏப்.29:குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர், தாம்பரம் அடுத்த கரசங்கால் பகுதியில் பிளாஸ்டிக் குடோன் நடத்தி வருகிறார். இங்கு, ஒரகடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் பொருட்கள் கொண்டு வந்து தரம் பிரித்து, மறுசுழற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் குடோனில், நேற்று வழக்கம்போல் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்து திடீரென தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நெருப்பை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பிளாஸ்டிக் குடோனில் தீப்பிடித்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. தகவல் அறிந்ததும் தாம்பரத்தில் இருந்து தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர்.
