அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.4.80 லட்சம் மோசடி காங்கிரஸ் பொது செயலாளர் உள்பட இருவர் மீது வழக்கு

பெரம்பூர், ஏப்.29: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4.80 லட்சம் மோசடி செய்த வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் உள்பட இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வியாசர்பாடி எம்கேபி நகர் பகுதியை சேர்ந்தவர் ரமணி (41). கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். பின்னர், ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அப்போது, இவரிடம் படித்த மாணவி ஒருவர், ரமணிக்கு போன் செய்து, ஏன் பள்ளிக்கு வருவதில்லை என கேட்டுள்ளார்.

அதற்கு ரமணி, தான் அரசு வேலைக்கு முயற்சி செய்வதாக கூறியுள்ளார். உடனே அந்த மாணவி, அவரது அப்பா அமீர் அம்ஷா என்பவரிடம் இந்த தகவலை கூறியுள்ளார். தொடர்ந்து, அமீர் அம்ஷா, ரமணியை தொடர்பு கொண்டு தனக்குத் தெரிந்த சசிகுமார் எனபவர் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாகவும், இதற்கு ரூ.6 லட்சம் செலவாகும், என்று கூறியுள்ளார். இதனை நம்பிய ரமணி, பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய அமீர் அம்ஷா போலி பணியானையை தயாரித்து வாட்ஸ் அப் மூலம் ரமணிக்கு அனுப்பினார். அந்த பணி ஆணை போலி என்பதை கண்டறிந்த ரமணி தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதனால், தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.

அதன்பேரில், அமீர் அம்ஷா, சசிகுமார் ஆகியோர் ரூ.1.20 லட்சத்தை ரமணியிடம் கொடுத்தனர். மீதுமுள்ள ரூ.4.80 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றினர். பணம் மோசடி குறித்து ரமணி எம்கேபி நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அமீர் அம்ஷா, சசிகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதில், அமீர் அம்ஷா வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: