பூந்தமல்லி: போரூர் அருகே சரக்கு வாகனம் மோதி 4 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். அவது தாய் உள்ளிட்ட 2 பேர் காயமடைந்தனர். திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (30). இவரது மனைவி குளோரி (28). இவர்களுக்கு ரியான் பெலிக்ஸ் (4) என்ற மகன் உள்ளார். தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக, இவர்கள், தங்களது உறவினர்களான திருவேற்காட்டை சேர்ந்த கிருபா, ஜெர்லின், டேனியல் மற்றும் 5 மாத கைக்குழந்தை ஆகியோருடன் சிவகங்கைக்கு சென்று விட்டு இன்று அதிகாலை சென்னைக்கு திரும்பினர்.
போருர் அருகே சுங்கச்சாவடியில் பஸ்சில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றபோது கோயம்பேட்டில் இருந்து பூக்கள் ஏற்றி கொண்டு தாம்பரம் நோக்கி சென்ற சரக்கு வேன், இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் குளோரி, ரியான் பெலிக்ஸ் மற்றும் குளோரி சகோதரியின் 5 மாத கைக்குழந்தை ஜீவன் புவனேஷ் ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர். பன்னீர்செல்வம், கிருபா, ஜெர்லின், டேனியல் ஆகியோர் நூலிழையில் உயிர் தப்பினர்.
தகவலறிந்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவன் ரியான், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். குளோரி, ஜீவன் புவனேஷ் ஆகியோர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் சிதம்பரம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
