சென்னை: அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம் அருகே அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்து சமூக வைத்தளத்தில் பதிவு செய்த தேர்தல் தற்காலிக பணியாளரும், தவெக நிர்வாகியுமான யுவராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் கிண்டியில் உள்ள அண்ணாபல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்மில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் தி.நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 3 வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 540 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பணியை சென்னை தேர்தல் ஆணையம் தரமணியில் உள்ள தனியார் நிறுவன ஒப்பந்த அடிப்படையில் அமைத்துள்ளது. அந்த வகையில் அண்ணாபல்கலைக்கழகத்தில் இந்த நிறுவனம் சார்பில் 180 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சிசிடிவி கேமரா அமைத்த தனியார் நிறுவனம் சார்பில் சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கவும், பராமரிக்கவும் வாக்கு எண்ணும் மையத்தில் சென்னை தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் பணியாற்றும் வகையில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணிக்க ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் சார்பில் திருவாரூர் மாவட்டம் பனகுடியை சேர்ந்த யுவராஜ் என்பவரை நியமித்து இருந்தனர். அவருக்கு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சார்பில் தற்காலிக ஊழியருக்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்காலிக ஊழியரான யுவராஜ் தேர்தல் பணியின் போது, அதுவும் வாக்கு பதிவு இயந்திரம் வைத்துள்ள ஸ்ட்ராங் ரூம் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து, தனது லேப்டாப்பில் தவெக தலைவர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்த்துள்ளார். இந்த திரைப்படத்தை சட்டவிரோதமாக பார்ப்பது குற்றம் என மாநில சைபர் குற்றப்பிரிவு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.
யுவராஜ் அந்த திரைப்படத்தை பார்த்ததும் இல்லாமல், அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ காட்சிகளுடன் வெளியிட்டுள்ளார். அந்த காட்சியில் அவர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளும் என் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்றும், நான் தான் தேர்தல் பார்வையாளர் என அவருக்கு வழங்கப்பட்ட தற்காலிக தேர்தல் பணியாளருக்கான அடையாள அட்டை மற்றும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள சிசிடிவி கண்காணிக்கும் காட்சிகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சக தேர்தல் பொறுப்பாளர்கள் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதை தொடர்ந்து சென்னை தேர்தல் அதிகாரியின் உத்தரவுப்படி தடையை மீறி ‘ஜனநாயகன்’ திரைப்படம் பார்த்த மற்றும் சிசிடிவி காட்சிகளை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்த தனியார் ஒப்பந்த ஊழியரான யுவராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் படி போலீசார் அதிரடியாக நேற்று சிசிடிவி கேமரா அமைத்த தனியார் நிறுவனத்தின் ஊழியரான யுவராஜ் மீது தடை ெசய்யப்பட்ட இடத்தில் வீடியோ பதிவு செய்தது உள்ளிட்ட 4 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் தீவிர விஜய் ரசிகர் என்றும், தவெக நிர்வாகியாகவும் இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, அவர் பணியில் இருந்த போது என்னென்ன பணிகளை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்திய அவரது செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சிசிடிவி கேமராக்கள் அமைக்க ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனத்திடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
