சேலம்: நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் 3.50 கோடி குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சேலத்தில் நடந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கூறினார். சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், புதிதாக 2 இடங்களில் ரூ.59.43 கோடியில் 2 அடுக்குமாடி நீதிமன்றங்கள் கட்டப்பட்டுள்ளது. 16 நீதிமன்றங்களை கொண்ட இந்த நீதிமன்ற கட்டிடங்களின் திறப்பு விழா நேற்று நடந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத்அரவிந்த் தர்மதிகாரி ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில், உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது: சேலத்தில் 1803ம் ஆண்டு முதன்முதலில் ஜில்லா கோர்ட் உருவானது. இப்படி 200 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் மிக்க நீதிமன்ற வளாகத்தில், புதிதாக 2 அடுக்குமாடி நீதிமன்ற கட்டிடங்களை தற்போது திறந்திருக்கிறோம். வழக்குகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும். அப்படி முடியும்போது, நீதியின் தரம் தாழ்ந்து விடக்கூடாது.
இன்றைய சூழலில், நாடு முழுவதும் 4.81 கோடி வழக்குகள் நிலுவையில் தேங்கியுள்ளது. இவற்றில் 4.18 கோடி வழக்குகள், மாவட்ட நீதிமன்றங்களில் உள்ளது. இவ்வழக்குகளை விரைந்து முடித்திட நீதிமன்ற கட்டிட கட்டமைப்பு அவசியம். தேங்கி கிடக்கும் வழக்குகளில் 3.50 கோடி வழக்குகள், குற்றவியல் வழக்குகளாகும். ஒரு சமுதாயம் சரியானதாக இருக்க வேண்டுமென்றால், குற்றவியல் வழக்குகள் குறைய வேண்டும். தேங்கியிருக்கும் குற்றவியல் வழக்குகளில் 2.50 கோடி வழக்குகள், 7 ஆண்டு தண்டனைக்குரிய வழக்குகள்.
இவற்றில் விசாரணை நீதிமன்றங்களில் மட்டும் 2.25 கோடி வழக்குகள் உள்ளன. இவ்வழக்குகளை விசாரிப்பதில் தேக்கம் உள்ளது. இதையெல்லாம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் எடுத்துக்கூறினேன். அதற்கு அவர், ஒரு கமிட்டி அமைத்து தேங்கியுள்ள குற்றவியல் வழக்குகளை குறைக்க நடவடிக்கை எடுக்க கூறினார். அதற்கான நடவடிக்கையை முதன்முறையாக தமிழ்நாட்டில் துவங்கியிருக்கிறோம். இவ்வழக்குகளை குறைக்க நீதித்துறை, வழக்கறிஞர்கள், அரசு இணைந்து செயலாற்ற வேண்டும்.
7 ஆண்டுகளில் பெரும்பாலும் முடிக்கப்பட வேண்டிய வழக்குகளை விரைந்து தீர்வு காண புதிய சட்டத்தில் வழிவகைகள் உள்ளது. அதன்படி சில வழக்குகளை முடித்துவிடலாம். இதற்காக புகார்தாரர்களிடம் பேசி சுமுகமாக முடிக்க வேண்டும். அதே போல் உரிமையியல் வழக்குகள் குறைவது வருத்தம் தருகிறது. குற்றவியல் வழக்குகளை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும்.
இந்த வழக்குகளை முடித்து விட்டால், அடுத்து வழக்கு இருக்காதே என கருதக்கூடாது. நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தேங்கியுள்ள 3.50 கோடி குற்றவியல் வழக்குகளை சரியான அணுகுமுறையால் குறைக்க வேண்டும். அதற்கான முயற்சி நடக்கிறது. இதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். அரசிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும். 1 கோடி வழக்குகளில் புகார்தாரர்களிடம் கேட்டு சுமுகமாக முடித்து வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
