×

கூடலூர் அருகே திருவிழாவின்போது யானை தாக்கி தொழிலாளி பலி வனத்துறையினர் மீது கல்வீச்சு: வாகனம் கண்ணாடி உடைப்பு: 2 பேர் கைது

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஒவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆருற்றுப் பாறை பகுதியில் பகவதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த ஒரு வாரமாக விமரிசையாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அம்மன் கோயில் மற்றும் விநாயகர் கோயில் திருவிழாக்கள் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை விழா கமிட்டியார் மேற்கொண்டு வந்தனர். நேற்று முன்தினம் இரவு கோயில் வளாகத்தில் பொதுமக்களுக்கான அன்னதானம் மற்றும் பிரசாதம் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.

அப்போது அதே பகுதியை சேர்ந்த தச்சுத் தொழிலாளி ரவி (எ) கலைச்செல்வன்(37) சமையலுக்கு தேவையான தண்ணீரை திறந்து விடுவதற்காக கோயிலில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்றார். அங்கு மறைந்திருந்த காட்டு யானை அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து வந்தனர். அப்போது திருவிழாவிற்கு கூடியிருந்த பொதுமக்கள், காட்டு யானை நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறி வாக்குவாதம் செய்தனர்.

சிலர் யானை தாக்கி உயிரிழந்த ரவியின் உடலை எடுக்க விடாது தகராறு செய்ததோடு, வனத்துறை ஜீப் கண்ணாடியை கல்வீசி உடைத்தனர். வேட்டைத்தடுப்பு காவலர்கள் மீதும் கற்களை வீசினர். இதையடுத்து கூடலூர் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். நள்ளிரவாகியும் தகராறு நீடித்தது. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு ரவியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

கல்வீச்சில் காயமடைந்த வனக்காவலர் விஸ்வநாதன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட 6 பேர் கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வனத்துறை புகாரின் பேரில், ஆனந்த் (30), மணி(32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு நடைபெற வேண்டிய தேரோட்டம் நடைபெறவில்லை. கோயில் திருவிழாக்களும் பாதியில் நிறுத்தப்பட்டன.

Tags : Gudalur ,Bhagavathy Amman temple ,Arutrupara ,Oveli Panchayat ,Nilgiris district ,Amman temple ,Vinayagar ,
× RELATED சொந்த ஊர்களில் சட்டசபை தேர்தலுக்கு...