ஃபிபா உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி டிக்கெட் விலை ரூ.22 கோடி: ரீசேல் வெப்சைட்டில் வாங்கலாம்

நியூஜெர்சி: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காண்பதற்கான 4 டிக்கெட்டுகள், தலா ரூ. 22 கோடி விலையில், மறு விற்பனை தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.  ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் ஜூன் 12ம் தேதி முதல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெற உள்ளன. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 48 முன்னணி அணிகள், 104 போட்டிகளில் மோதவுள்ளன.

இதன் இறுதிப் போட்டி, அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில், ஈஸ்ட் ரூதர்போர்ட் பகுதியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இறுதிப் போட்டியை காண்பதற்கான 4 டிக்கெட்டுகளை, ஃபிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு, அதன் மறு விற்பனை இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது. இவற்றின் விலை தலா ரூ. 22 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்டுகளின் விலையை அவற்றின் உரிமையாளரே நிர்ணயிப்பார் என்றும், டிக்கெட் வாங்குபவரிடம் இருந்தும், விற்பவரிடம் இருந்தும் தலா, 15 சதவீத கமிஷனை ஃபிபா பெற்றுக் கொள்ளும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த 4 டிக்கெட்டுகளுக்கு உரிய இருக்கைகள், கோல் போஸ்டுக்கு அருகில் உள்ளதாக கூறப்படுகிறது. இதே மறுவிற்பனை இணையதளத்தில் வேறு சிலரும் தங்கள் டிக்கெட்டுகளை விற்பனைக்கு பட்டியலிட்டுள்ளனர். அவை, ரூ. 20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: