*வீடுகளில் பதுக்கிய சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்
சித்தூர் : சித்தூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் சுமார் 200 போலீசார் தீவிர வாகன தணிக்கை நடத்தினர். அப்போது வீடுகளில் பதுக்கிய கள்ளச்சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சித்தூர் மாவட்ட எஸ்பி துஷார்துடி உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களை தடுக்கவும், மது, கஞ்சா, கள்ளச்சாராயம், குட்கா உள்ளிட்டவற்றை கடத்துவதை தடுக்கவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பிரதான சாலைகளில் தீவிர வாகன தணிக்கை நடத்தி சந்தேகத்திற்கு இடமான நபர்களை பிடித்து விசாரிக்கின்றனர்.
இதேபோல் நேற்று மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது நகிரி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சில வீடுகளில் சோதனை செய்ததில் அங்கு பதுக்கி வைத்திருந்த 13 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் பெத்தபஞ்சானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜம்கொண்டா வனப்பகுதியில் 25 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 150 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் சுமார் 200 போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இதுகுறித்து சித்தூர் எஸ்பி துஷார்துடி கூறியதாவது: குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதும் மக்களிடையே பாதுகாப்பு சூழலை வலுப்படுத்துவதும் இச்சோதனைகளின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு பகுதியிலும் காவல்துறையினரின் இருப்பை வெளிப்படையாக காட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சமூக விரோத செயல்களை தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம்.
சுற்றுவட்டாரத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்களையோ அல்லது வாகனங்களையோ பொதுமக்கள் கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கவேண்டும். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும்.
அதேபோல், ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையிடம் உதவி கோரலாம். சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே அதிகரிப்பதற்காக, தலைக்கவசம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதன் மூலம் விபத்துகளை தவிர்க்கலாம் என்றும் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பு. சிறிய அலட்சியம் கூட உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும். எனவே மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையின் ஒருங்கிணைப்பு மற்றும் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற திடீர் சோதனைகள் தொடரும். இவவாறு தெரிவித்தார்.
