புதுடெல்லி: ங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வைச் சந்தித்தாலும், இந்த ஆண்டு அட்சய திருதியை விற்பனை 20,000 கோடி ரூபாயைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ங்கம் விலை கடந்த ஆண்டு 10 கிராமுக்கு 1,00,000 ரூபாயாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 1.58 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் வெள்ளி விலை கிலோவுக்கு 85,000 ரூபாயிலிருந்து வரலாறு காணாத வகையில் 2.55 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. விலையேற்றம் கடுமையாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்குவதை நிறுத்தாமல் மிகவும் திட்டமிட்டு முதலீடு செய்து வருகின்றனர். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,14,880க்கு (8 கிராம்) விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 உயர்ந்த தங்கம் ரூ.14,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 2025ம் ஆண்டில் அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை 16,000 கோடி ரூபாயாக இருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு அட்சய திருதியையான இன்று இந்த விற்பனை மதிப்பு 20,000 கோடி ரூபாயைத் தாண்டும் என அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) கணித்துள்ளது. இதுகுறித்து ெடல்லி சாந்தினி சவுக் தொகுதி எம்.பி., மற்றும் சிஏஐடி பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் கூறுகையில், ‘அட்சய திருதியை என்பது பாரம்பரியமாக தங்கம் வாங்குவதற்கான புனிதமான நாளாகும். விலை உயர்வு காரணமாக வாடிக்கையாளர்கள் வாங்கும் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய விலையில் 10,000 கிலோ தங்கம் விற்பனை ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது 2 முதல் 4 லட்சம் நகைக்கடைக்காரர்களிடம் தலா 25 முதல் 50 கிராம் வரை விற்பனை ஆவதற்கு சமம். இது விற்பனை மதிப்பில் உயர்வை காட்டினாலும், அளவீடு ரீதியாக சரிவையே காட்டுகிறது’ என்றார். மேலும் சிஏஐடி தேசிய தலைவர் பி.சி.பார்டியா கூறுகையில், ‘குறைந்த எடை கொண்ட நகைகள் மற்றும் வைரம் சார்ந்த பொருட்கள் மீது மக்கள் கவனம் செலுத்துகின்றனர். செய்கூலி குறைப்பு மற்றும் இலவச தங்க நாணயங்கள் போன்ற சலுகைகள் நுகர்வோரை ஈர்க்கின்றன’ என்றார்.
இந்தாண்டு சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான 1,56,800 கிலோ வெள்ளி விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சராசரியாக ஒரு கடைக்கு 400 முதல் 800 கிராம் வரை வெள்ளி விற்பனை ஆகலாம். விலை ஏற்ற இறக்கங்களால் நகை வியாபாரிகள் சவால்களை சந்தித்தாலும், சந்தையில் மக்களின் வருகை உற்சாகமாகவே உள்ளது. தற்போது டிஜிட்டல் தங்கம், தங்கப் பத்திரங்கள் மற்றும் இடிஎப் எனப்படும் பரிமாற்ற வர்த்தக நிதி ஆகியவற்றில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். நகை வாங்கும் போது எச்.யு.ஐ.டி. சான்றிதழ் உள்ளிட்ட ஹால்மார்க் விதிமுறைகளை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும் என்று அகில இந்திய நகை மற்றும் பொற்கொல்லர் கூட்டமைப்பு தலைவர் பங்கஜ் அரோரா வலியுறுத்தியுள்ளார்.
