ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலியன் பூங்காவில் பெரும்பாலான செடிகளில் மலர்கள் பூத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.ஆண்டுதோறும் கோடை சீசன் காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதுபோன்று கோடை சீசனின்போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், பூங்கா முழுவதிலும் சுமார் 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்து காணப்படும்.
மேலும் பல ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அவைகள் மாடங்கள் மற்றும் புல் மைதானங்களில் அலங்கரித்து வைக்கப்படும்.
இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்வார்கள். குறிப்பாக மலர் கண்காட்சி நடக்கும் ஐந்து நாட்கள் தாவரவியல் பூங்காவில் பல்வேறு மலர்களால் ஆன அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். இது தவிர பூங்கா முழுவதிலும் உள்ள மலர் செடிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக் குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்வார்கள்.
தற்போது கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இத்தாலியன் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள பெரும்பாலான மலர் செடிகளில் தற்போது மலர்கள் பூத்துக் காணப்படுகிறது. குறிப்பாக டேலியா மலர்கள் பல வண்ணங்களில் பூத்துக் காணப்படுகிறது. இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துச் செல்வது மட்டுமின்றி அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். ஓரிரு நாட்களில் பூங்காவில் உள்ள அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்துவிடும். மே மாதம் முதல் வாரம் முதல் ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மலர்களை கண்டு ரசித்து செல்லலாம்.
