மேட்டுப்பாளையம், ஏப்.17: தமிழகத்தில் வரும் ஏப்.23 ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் அச்சமின்றி தேர்தலில் வாக்களிக்கும் வகையில் கோவை எஸ்பி கார்த்திகேயன் கொடி அணிவகுப்பு நடத்த அறிவுறுத்தி இருந்தார். அதன்படி நேற்று மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் காவல் ஆய்வாளர் மணிகண்டன் முன்னிலையில் 100 க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இந்த அணிவகுப்பானது காட்டூர் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று ரயில்வே கேட், கரிமேடு,எல்.எஸ்.புரம் வழியாக வந்து ஊட்டி சாலையில் உள்ள சன் பேக்கரி முன்பு நிறைவு பெற்றது. இதுகுறித்து போலீசார் கூறுகையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி தேர்தலில் வாக்களிக்கலாம். தேர்தல் சம்பந்தமாக எந்த ஒரு தகவல் இருந்தாலும், புகார்களாக இருந்தாலும் போலீஸாருக்கு தயங்காமல் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
