×

குலம் காக்கும் குலதெய்வ வழிபாடு

ஒரு மனிதனின் குடும்பப் பாரம்பரியம் எனக் கொண்டால் அவன் மூன்று வகை தெய்வங்களை வணங்க நேரிடும் அவை
1. குல தெய்வம்
2. இஷ்ட தெய்வம்
3. பிரீதி தெய்வம்.
இவற்றில் குல தெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானதாகும்.

குல தெய்வம்
பரம்பரை பரம்பரையாக ஒரு வழி பங்காளிகளாக கூடி வழிபாடு செய்யும் தெய்வம் குல தெய்வம் ஆகும்.
நம் குலத்தில் தோன்றி தெய்வ நிலையை அடைந்தவர்களே குலதெய்வமாக வணங்கப்படுகிறார்கள் விரைவில் அனுக்ரஹம் செய்யும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.
குலதெய்வம் என்பது தாய் வழியா? தந்தை வழியா? என்ற குழப்பங்கள் சிலருக்கு ஏற்படுவது உண்டு. தந்தை வழி வருவதைத் தான் குலதெய்வ வழி என கொள்ளல் வேண்டும். அவ்வழியே குலவழி தெய்வமாக வணங்குதல் வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வம் உண்டு. இருந்தபோதிலும் சில குடும்பங்களுக்கு குலதெய்வம் எது என்பதே தெரியாமல் இருப்பது உண்டு. அவர்கள் திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக வழிபட்டு வந்தால் நன்மைகள் பல உண்டு.
குடும்பத்தில் நடக்கும் ஒவ்வொரு சுப காரியத்திற்கும் குல தெய்வத்திற்குத்தான் முதல் மரியாதை பூஜைகள் செய்யப்படுகின்றன.
குலதெய்வ வழிபாடு இல்லாத குடும்பங்கள் நலம் பெறுவது கடினம். அதையும்மீறி எவ்வளவுதான் முன்னேற்றம்அடைந்தாலும் சிறுசிறு வீழ்ச்சிகள் பல தொல்லைகள் நடந்தேறிக் கொண்டேதான் இருக்கும். மேலும், குலதெய்வ வழிபாடு இல்லாமல் செய்யும் எந்தக் காரியமும் சரிவர அமைவதில்லை.
குலதெய்வத்தின் அனுக்கிரகம் இல்லை என்றால் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் பிரயோஜனமில்லை. நீண்ட ஆயுளுடன் தனது வர்க்கம் வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்கள், கண்டிப்பாக குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் ருவருடைய ஜெனன ஜாதகத்தில் 5ஆம் பாவக அதிபதி எந்த நட்சத்திரக் காலில் நிற்கிறாரோ, அந்த நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பானதாகும்.
இதுதவிர அமாவாசை காலங்களில் குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சாலச் சிறந்தது. பன்னிரு மாதங்களிலும் வரக்கூடிய அமாவாசைகள் அனைத்தும் சிறப்பானவைதான் இருப்பினும், வைகாசி, புரட்டாசி, தை மாதங்களில் வரக்கூடிய அமாவாசைகளில் குலதெய்வ வழிபாடு செய்வது விசேஷமானதாகும். ஏனெனில், சூரியனும் – சந்திரனும் இணையும்போது தான் அமாவாசை என்ற நிகழ்வு ஏற்படுகிறது. சூரியனின் நட்சத்திரமும், சந்திரனின் நட்சத்திரமும் இணைந்து இருக்கக்கூடிய ராசிகள் ரிஷபம், கன்னி, மகரம் போன்றவை ஆகும் இவைகள் ஒன்றுக்கொன்று திரிகோணமாக அமைந்திருப்பது வெகு சிறப்பு இம்மூன்று ராசிகள் குறிப்பிடும் மாதங்கள்தான் வைகாசி, புரட்டாசி. தை முதலியவை ஆகும்.

கிரகங்கள் குறிக்கும் ய்வாம்சங்கள்
சூரியன் – சிவன், உமாமகேஸ்வரர், நடராஜர்.
சந்திரன் – அம்பிகை அம்சம் உடைய தெய்வங்கள்.
செவ்வாய் – பைரவர், சுப்பிரமணியர்
புதன் – விஷ்ணு, விஷ்ணு தொடர்பான மூர்த்திகளான வராஹர், நரசிம்மர், ஹயக்ரீவர் முதலானோர்.
குரு – சித்தர்கள் இடைநிலை உணர்ந்த பெரியோர்கள்
சுக்கிரன் – லஷ்மி தேவி, இந்திராணி, அன்னபூர்ணேஷ்வரி.
சனி- கருப்பண்ண சாமி மற்றும் காவல் தெய்வங்கள்.
மேற்கூறிய தெய்வங்கள் மட்டுமன்றி 5 ஆம் பாவகத்தில் நின்ற கிரகம் 5 ஆம் பாவக அதிபதியோடு சேர்ந்த கிரகம் ஆகியவற்றைக் கொண்டும் குலதெய்வத்தைக் கண்டறியலாம்.

இதன் விவரங்கள் பின்வருமாறு
சூரியன் – சிவன், உமாமகேஸ்வரர், நடராஜர்
சந்திரன்- உமா மகேஸ்வரர், நடராஜர் அர்த்தநாரீஸ்வரர்
சூரியன் – செவ்வாய் – வீரபத்திரர் பைரவர்.
சூரியன்- புதன் – தர்ம சாஸ்தா ஐயப்பன்.
சூரியன்- குரு – சித்தர் இறைநிலை உணர்ந்த பெரியோர்.
சூரியன்- சுக்கிரன் – நடராஜர்.
சூரியன்- சனி – வீரபத்திரர் பாண்டி முனி.
சூரியன்- ராகு – சக்கரத்தாழ்வார் கருடன்.
சூரியன்- கேது – கணபதி.
சந்திரன் – செவ்வாய் – காமாட்சி மாரியம்மன்
சந்திரன் – புதன் – ராமர்
சந்திரன்- குரு – அன்னபூரணி.
சந்திரன் – சுக்கிரன் – மூகாம்பிகை.
சந்திரன்- சனி – ஸ்ரீ ரங்கநாதர்.
சந்திரன்- ராகு – துர்க்கை சர்ப்ப தேவதை.
சந்திரன்- கேது – சரஸ்வதி.
செவ்வாய்- புதன் – வெங்கடாஜலபதி ஆஞ்சநேயர்.
செவ்வாய்- குரு – தட்சிணாமூர்த்தி.
செவ்வாய்- சுக்கிரன் – மகாலட்சுமி
செவ்வாய்- சனி – கருப்பண்ணசாமி நெருப்பில் இறங்கிய பெண் தெய்வம்.
செவ்வாய்- ராகு- சாட்டை வைத்திருக்கும் தெய்வம்.
செவ்வாய்- கேது – விநாயகர்.
புதன்- குரு – சத்தியநாராயணர்.
புதன்- சுக்கிரன் – கிருஷ்ணர்.
புதன்- சனி – ஆஞ்சநேயர்.
புதன்- ராகு – ஸ்ரீ ரங்கநாதர்.
புதன்- கேது – விஷ்வக்சேனர்
குரு – சுக்கிரன் – ஹயக்ரீவர்
குரு- சனி -அய்யனார்.
குரு – ராகு – ராகவேந்திரர்.
குரு- கேது- சித்ரகுப்தர்.
சுக்கிரன்- சனி- காளியம்மன்.
சுக்கிரன்- ராகு – முனிவர்கள் சித்தர்கள்
சுக்கிரன் – கேது – குருமார்களின் மந்திராலயம்.
சனி- ராகு – புற்றுகள் நாக தேவதை
சனி – கேது – மதுரை வீரன் உக்கிரமான காளி.
5 ஆம் பாவக ராசியின் திசை 5க் குடையவன் திசை குலதெய்வம் உள்ள திசையை குறிக்கும்.
ஐந்தாம் பாவக அதிபதி பாதக ஸ்தானத்தில் நின்றாலோ, அல்லது பாதகாதிபதி ஐந்தாம் பாவகத்தில் நின்றாலோ அல்லது ஐந்தாம் பாவகாதிபதியும் பாதகாதிபதியும் கூடியோ பார்த்தோ நின்றால் அது குலதெய்வ தோஷமாகும்.
மேலும், சூரியன் சந்திரன் பாதக ஸ்தானத்தில் நின்றாலும் குலதெய்வ தோஷம் என அறிய வேண்டும்.
குலதெய்வ தோஷம் உடையவர்கள் தங்களது குலதெய்வத்திற்கு விசேஷ வழிபாடுகள் செய்ய வேண்டும். அவரவர் தகுதிக்கேற்ப தங்களால் இயன்றதை குலதெய்வக் கோயிலுக்கு செய்ய வேண்டும். வேம்பு, இலுப்பை, பசு நெய் கலந்த எண்ணெயில் குலதெய்வத்திற்கு தீபம் ஏற்ற வேண்டும்.
நமது முன்னோர்கள்தான் குல தெய்வமாக வணங்கப்படுகிறார்கள். எனவே, முன்னோர்கள் அனுக்கிரகம் பெற நாம் பூசம், விசாகம், சதயம் நட்சத்திரங்கள் வரும் நாளில் விரதம் இருந்து காலை உணவாக பால் பழம் சாப்பிட வேண்டும். மதியம் உளுந்த வடை உட்கொள்ள வேண்டும். மாலை 6:00 மணிக்குள்ளாக நவகிரக ராகு பகவானுக்கு 4 நெய்தீபம் ஏற்றி வணங்கி வர வேண்டும். இரவு வாழை இலையில் உளுந்து கலந்த உணவை சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை தோறும் பெண்கள் குளித்து முடித்துவிட்டு காலை 6 முதல் 7 மணிக்குள்ளாக பீரோவில் 2 வெற்றிலை 1 பாக்கு 1 ரூபாய் நாணயம் வைக்க வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெற்றிலை பாக்கினை எடுத்துவிட்டு மீண்டும் புதிதாக வைக்க வேண்டும். 1 ரூபாய் நாணயம் நிறைய சேர்ந்த பிறகு குலதெய்வக் கோவிலுக்கு செல்லும்போது அதை உண்டியலில் போட வேண்டும். வெற்றிலை பாக்கினை நீர்நிலை பகுதிகளில் விட்டு விடவும். இதன் மூலம் குலதெய்வம் அருளால் வீட்டில் பணம் தங்கும் செல்வச் செழிப்பு ஏற்படும். எனவே, அனைவரும் அவரவர் குல தெய்வத்தை அனுதினமும் நினைத்து வணங்கி வாழ்க்கையில் ஏற்றம் பெற வேண்டும்.

Tags : Ishtha Devam ,Preeti ,
× RELATED அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்