×

நாகர்கோவிலில் மோடி ரோடு ஷோ : முதல்முறையாக அண்ணாவுக்கு மரியாதை

தமிழ்நாட்டில் வருகிற 23ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை நாகர்கோவில் வந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிபேடு தளத்தில் வந்து இறங்கினார்.

பின்னர் கார் மூலம் வேப்பமூடு காமராஜர் சிலை சந்திப்பை பிரதமர் மோடி வந்தடைந்தார். அங்கு காமராஜர் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காமராஜர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 4.40க்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏறி, ரோடு ஷோ நிகழ்ச்சியை தொடங்கினார். அவருடன், வாகனத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடன் வந்தனர்.

சாலையின் இருபுறமும் நின்று ெகாண்டிருந்த பாரதிய ஜனதா தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு பிரதமர் மோடி வந்தார். அப்போது அண்ணா ஸ்டேடியம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே அம்பேத்கர் படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. வாகனத்தில் இருந்து இறங்கிய பிரதமர், அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாலை 5.10க்கு அவர் வடசேரி அண்ணா சிலை சந்திப்பை வந்தடைந்தார்.

பின்னர் வாகனத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடி, அண்ணா சிலையின் கீழ் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த பேரறிஞர் அண்ணா திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகில் வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மோடிக்கு வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். தொடர்ந்து, பாரதிய ஜனதா, அதிமுக , தமாகா, அமமுக நிர்வாகிகள் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது, பிரதமர் மோடி பேசுகையில், நீங்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். என்டிஏ கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. சிறந்த தமிழ்நாட்டுக்காகவும், வளர்ச்சி தமிழ்நாட்டுக்காகவும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார். இதை தொடர்ந்து சாலையோரத்தில் நின்ற ெதாண்டர்களுடன் கை குலுக்கி, தாமரை சின்னத்தை காட்டி பிரதமர் வாக்கு கேட்டார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து மாலை 5.20க்கு புறப்பட்டு சென்றார்.

மோடி ரோடுஷோவுக்கு உறுதி மரியாதை கொடுத்து அழைக்கவில்லை என்று பாமக புறக்கணித்துவிட்டது. இதுவரை காமராஜர், அம்பேத்கர், எம்ஜிஆரின் புகழ்களை பேசி வந்த மோடி, அவர்களது பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் எக்ஸ் தளத்தில் பதவி போடுவார். தற்போது, தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் அண்ணாவுக்கு முதல்முறையாக மோடி மரியாதை செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Modi Road Show ,Nagarkov ,Anna ,Shri Narendra Modi ,Narendra Modi ,Bharatiya Janata Party ,Kanyakumari ,Thoothukudi ,Tirunelveli ,Tenkasy ,23rd Assembly elections ,Tamil Nadu ,
× RELATED மருத்துவமனையிலிருந்து ராமதாஸ் டிஸ்சார்ஜ்