நெல்லையில் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியது நயினார் உறவினரிடம் ரூ.1.15 கோடி பறிமுதல்: வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பதுக்கலா?

நெல்லை: நெல்லையில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பாஜ மாநில தலைவர் நயினார் உறவினர் மற்றும் தொழிலதிபரிடம் ரூ.1.15 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கணக்கில் வராத ரூ.1 கோடியே 15 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்.23ம் தேதி நடக்கிறது. இதையடுத்து ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமான பணம் கொண்டு செல்பவர்கள் குறித்து பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்தது தகவலின்பேரில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். நெல்லை சந்திப்பில் பிரபலமான சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா கடையை நடத்தி வருபவர் சிவசுப்பிரமணியன். இவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

பல மணி நேரம் நீடித்த இந்த தீவிர சோதனையில் வீட்டில் உள்ள பல்வேறு ஆவணங்கள் மற்றும் வரவு, செலவு கணக்குகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.40 லட்சம் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். இதேபோல் நெல்லை முக்கிய இடங்களில் அருவி பேக்கரி நடத்தி நடராஜன். இவரது மனைவி லட்சுமி நடராஜன். இவருக்கு சொந்தமாக நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் புகுந்து அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.75 லட்சத்தை வருமான வரித்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதில் லட்சுமி நடராஜன் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் ஆவார். எனவே நயினார் நாகேந்திரன் போட்டியிடும் சாத்தூரில் தொகுதியில் வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கப்பட்டதா என விசாரித்து வருகின்றனர்.

* 2024 பார்லி. தேர்தலில் ரூ.4 கோடி சிக்கியது
கடந்த 2024 மக்களவை தேர்தலில் நெல்லை மக்களவை தொகுதியில் தற்போதைய பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். அப்போது அவரது தேர்தல் செலவுக்காக சென்னையில் இருந்து ரூ.4 கோடி பணத்தை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு வந்தனர். இதுகுறித்து ரகசிய தகவல் அறிந்த போலீசார் தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நின்ற போது அதிரடியாக பெட்டிக்குள் நுழைந்து பணத்தை கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக நயினார் உதவியாளர் உள்ளிட்ட சிலர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: