சேலம் கோட்டை பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியதாவது: பெண்கள் சக்தியை நிலைநிறுத்த, சேலத்தில் பெண்கள் மாநாட்டை திரட்டி மரியாதை செலுத்தியுள்ளனர். முதல்வர் தினசரி நடைப்பயிற்சி சென்று ஆக்டிவாக உள்ளார். ஆண்களுக்கு மத்தியில் பெண்ணாக பேரணியில் நடந்து வரும் போது, ஒவ்வொரு நொடிக்கும் முதல்வரை திரும்பி பார்த்தபோது, பெண்களுக்கு அவர் அளிக்கும் மரியாதை, சம உரிமையை தான் உணர்ந்தேன். பாதுகாப்புடன் என்னை அழைத்து வந்தார்.
பெண் இனத்தின் பாதுகாவலராகவும், பெண் இனத்தை உயர்த்தும் தலைமகனாகவும் முதல்வர் விளங்குகிறார். மதசார்பற்ற வெற்றி கூட்டணி அண்ணா கூறியபடி கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் தமிழகம் முழுவதும் இருப்பதை பார்க்கிறேன். தமிழகம் முழுவதும் சென்று பார்க்கும் போது 200 தொகுதி அல்ல, 234 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இதன் மூலம் தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லாத நிலையை இந்த தேர்தல் உணர்த்தும்.
திமுகவின் தேர்தல் அறிக்கை தாய்க்குலங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கூப்பன் மூலம் என்ன வாங்கலாம் என குடும்பங்களில் டிஸ்கஷன் நடக்கிறது. குறிப்பாக பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் மூலம் இரண்டாவது முறையாக முதல்வர் ஆட்சி அமைப்பது உறுதி. தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்க போகிறது. நாளை கருப்பு கொடி ஏற்றி, கருப்பு உடை அணிய முதல் அழைப்பு கொடுத்துள்ளார். அண்ணா கூறியபடி வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற கூற்றை உறுதி செய்துவிடுவார்களோ என்ற சந்தேகம் உருவாகிறது.
ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடக்கும் சமயத்தில், இச்சட்டத்தை நிறைவேற்றுவதில் அப்படி என்ன அவசரம்? மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டால் தான், திட்டம் சக்சஸ் ஆகும். எதிர்ப்பை மீறி இதனை செயல்படுத்தினால் பழைய திமுகவை பார்க்க வேண்டி வரும் என முதல்வர் எச்சரித்துள்ளார். அனைவரையும் மதித்து வழிநடத்தக் கூடிய தலைமை பண்பு முதல்வரிடம் இருக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமியிடம் அந்த தலைமை பண்போ, அனுசரிக்கும் மாண்போ இல்லை. இதனால்தான் அங்கிருந்து ஓபிஎஸ், செங்கோட்டையன் என அனைவரும் வெளியேறுகின்றனர். இவ்வாறு பிரேமலதா பேசினார்.
* ‘லாலிபாப் சாப்பிடும் பேபி விஜய்’
‘‘தம்பி விஜய் தேர்தலில் தனியாக நின்று, தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும். எதிரில் இருப்பவர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது. கேப்டன் தனியாக நின்று தனது வாக்கு வங்கியை நிரூபித்தார். அதே போல, விஜய் தனியாக நின்று நிரூபிக்க வேண்டும். லாலிபாப் சாப்பிடும் பேபி; அரசியலுக்கு நீ லிட்டில் பாய்’’ என பிரேமலதா தெரிவித்தார்.
