×

வாசலுக்கே வரும் வாக்குப்பெட்டி விறுவிறுப்பாக நடக்கும் தபால் வாக்குப்பதிவு: முதல் நாளில் 4,610 பேர் ஜனநாயகக் கடமை ஆற்றினர்

நாகர்கோவில், ஏப்.14: ‘ஜனநாயகக் கடமையை ஆற்ற வயது ஒரு தடையல்ல’ என்பதை நிரூபிக்கும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நாளிலேயே 4,610 பேர் உற்சாகத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் புதிய நடைமுறைப்படி, வாக்குச்சாவடிக்கு வர இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ‘படிவம் 12டி’ மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டது. அதன்படி, குமரி மாவட்டத்தில் மொத்தம் 8,795 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

நேற்று முன்தினம் தொடங்கிய இந்த முதற்கட்டப் பணியில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவினர், உரிய பாதுகாப்புடன் வாக்காளர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்றனர். அங்கு ரகசியம் காக்கப்படும் வகையில் தற்காலிகத் திரை அமைத்து, வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் அதிகாரிகளின் இந்தச் செயல்பாடு முதியவர்கள் மற்றும் நடக்க இயலாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் முதல் நாளில் மட்டும் 4,610 வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். இதில் 2,819 பேர் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் என்பதும், 1,791 பேர் மாற்றுத்திறனாளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பதிவான வாக்குகளின் விவரம் வருமாறு: கன்னியாகுமரியில் அதிகபட்சமாக 2,404 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாளில் 1,140 பேர் (85+ வயதினர்: 771, மாற்றுத்திறனாளிகள்: 369) வாக்களித்துள்ளனர். பத்மநாபபுரத்தில் 1,707 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 755 பேர் (85+ வயதினர்: 514, மாற்றுத்திறனாளிகள்: 241) வாக்களித்தனர். குளச்சலில் மொத்தம் 1,266 விண்ணப்பதாரர்களில் 771 பேர் (85+ வயதினர்: 439, மாற்றுத்திறனாளிகள்: 332) தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். நாகர்கோவிலில் 1,201 விண்ணப்பதாரர்களில் 651 பேர் (85+ வயதினர்: 427, மாற்றுத்திறனாளிகள்: 224) ஆர்வத்துடன் வாக்களித்தனர். கிள்ளியூரி 1,074 விண்ணப்பதாரர்களில் 710 பேர் (85+ வயதினர்: 366, மாற்றுத்திறனாளிகள்: 344) வாக்களித்துள்ளனர். விளவங்கோடு தொகுதியில் 1,143 விண்ணப்பதாரர்களில் 583 பேர் (85+ வயதினர்: 302, மாற்றுத்திறனாளிகள்: 281) தங்கள் கடமையை முடித்துள்ளனர். முதல் நாளில் விடுபட்டவர்கள் மற்றும் மீதமுள்ள தகுதிவாய்ந்த வாக்காளர்களின் இல்லங்களுக்கு இன்றும் தேர்தல் அலுவலர்கள் நேரில் சென்று வாக்குகளைச் சேகரிக்கின்றனர். கோவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியாளர்கள் பிரிவில் முதல் நாளில் யாரும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நலக் குறைபாடுகளைப் பொருட்படுத்தாமல், தபால் வாக்குப்பதிவு மூலம் முதியவர்கள் காட்டி வரும் ஆர்வம், இளம் வாக்காளர்களுக்கு ஒரு பெரும் ஊக்கமாகவும், விழிப்புணர்வாகவும் அமைந்துள்ளது. இந்த தபால் வாக்குபதிவு இன்றும் (14ம் தேதி) நடக்கிறது.

Tags : Nagarko ,Kanyakumari district ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...