×

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு

தூத்துக்குடி, ஏப். 14: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஏட்டு கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி, உடல் நலம் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு உதவியாக அவரது மனைவியான 28 வயது இளம்பெண் இருந்தார். அவர் அனுமதிக்கப்பட்டிருந்த 50வது வார்டில் ஒரு கைதிக்கு பாதுகாப்பு பணிக்காக தட்டப்பாறை தெற்குத்தெருவை சேர்ந்த அருணாசலம் மகன் கோபாலகிருஷ்ணன்(36) என்ற ஏட்டு பணியில் இருந்துள்ளார். இவர் தற்போது சிப்காட் காவல் நிலையத்தில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி நள்ளிரவில் ஏட்டு கோபாலகிருஷ்ணன், தொழிலாளியின் மனைவியிடம் சென்று செல்போன் சார்ஜர் கேட்பது போல பேச்சு கொடுத்துள்ளார். மேலும் ஒரு கட்டத்தில் இளம்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதனை வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து இளம்பெண், தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ஏட்டு கோபாலகிருஷ்ணன் மீது பாலியல் தொந்தரவு, கொலை மிரட்டல், பெண்ணை துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Thoothukudi Government Hospital ,Thoothukudi ,Pudukkottai ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...