தூத்துக்குடி, ஏப். 14: மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல நாளை(15ம் தேதி) முதல் 61 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி நகரம் வரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை(15ம் தேதி) முதல் ஜூன் 14ம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது. மேலும் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள காலங்களில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தினுள் மீன்பிடி தொழில் சாராத நபர்கள் வருகை தருவதை தவிர்த்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
