திருப்புத்தூர், ஏப்.14: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ கொடுக்கும் பணியும் துவங்கியது. திருப்புத்தூர் தொகுதியில் 368 ஓட்டுச்சாவடிகளில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 904 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை தேர்தல் அலுவலர் சிவபாலன் துவக்கி வைத்தார். தொடர்ந்து வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்கள் பூச் சிலிப்களை வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கத் துவங்கியுள்ளனர். தினசரி 20 சதவீத வாக்காளர்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நேற்று முதல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு அவர்களது வீடுகளுக்கு சென்று வாக்குப்பதிவு செய்யும் முறை துவங்கியது. இதற்காக 18 குழுவினர் அவர்களின் வீடுகளுக்கு சென்று ஓட்டுப்பதிவை மேற்கொண்டு வருகின்றனர். இத்தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் 645 பேரும், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 708 பேரும் உள்ளனர். அவர்களின் வீடுகளுக்கு இந்த குழுவினர் சென்று வாக்குப்பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
