×

குமரி வருகிறார் பிரதமர் மோடி: நாகர்கோவிலில் ஏப்.15ம் தேதி ஒரு கி.மீ தூரம் ‘ரோடு ஷோ’: பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்

நாகர்கோவில், ஏப்.13: தமிழகத்தில் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் நரேந்திர மோடி வருகிற 15-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அன்று குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் தேசிய ஜெனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதற்கான பயணத் திட்டத்தின்படி, 15-ம் தேதி அன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக நாகர்கோவிலுக்கு புறப்படும் அவர், மறவன் குடியிருப்பில் உள்ள போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தளத்தில் தரையிறங்குகிறார்.

அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து கார் மூலமாக நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதிக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். அங்கிருந்து வடசேரி வரையிலான சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெறும் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். ரோடு ஷோவை முடித்துவிட்டு மீண்டும் ஹெலிகாப்டர் தளம் வரும் அவர் அங்கிருந்து மீண்டும் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து டெல்லி செல்கிறார்.
நாகர்கோவிலில் அலங்கரிக்கப்பட்ட திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி, சாலையின் இருபுறமும் திரளும் பொதுமக்களையும் தொண்டர்களையும் நோக்கி அவர் வாக்கு சேகரிக்கிறார். பிரதமரின் இந்த வருகையை முன்னிட்டு, குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, அவர் பயணிக்கும் சாலைகள் மற்றும் ஹெலிகாப்டர் தரையிறங்கும் மைதானம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : KUMARI ,PM ,MODI ,NAKARKOVI ,BJP ,Nagarko ,Narendra Modi ,Kanyakumari district ,Bharatiya Janata Party ,Tamil Nadu ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...