நாகர்கோவில், ஏப்.13: குமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள 15 லட்சத்து 20 ஆயிரத்து 338 வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டுகள்(பூத் ஸ்லிப்) வழங்கும் பணி நேற்று தொடங்கியது. அதன்படி, அந்தந்தப் பகுதிகளின் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று இந்தத் தகவல் சீட்டுகளை வழங்கி வருகின்றனர். வாக்காளர் தகவல் சீட்டுகளை விநியோகிக்கும்போது, அவற்றை உரிய குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் அண்டை வீட்டார் அல்லது அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் வழங்கக் கூடாது என்றும் அலுவலர்களுக்குக் கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தகவல் சீட்டை பெறும் வாக்காளர்கள், அதில் இடம்பெற்றுள்ள தங்களது பெயர், தந்தை/கணவர் பெயர், முகவரி மற்றும் பாகம் எண் போன்ற விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை உடனடியாகச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தச் சீட்டுகளில் இடம் பெற்றுள்ள கியூ-ஆர் கோடு வசதியைப் பயன்படுத்தி, வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் பிரத்யேகச் செயலி மூலம் தங்களின் பெயர் விவரம், வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள இடம் போன்ற தகவல்களை மிக எளிதாக தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ள இந்தத் தகவல் சீட்டு என்பது வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடியை அறிந்துகொள்வதற்கான ஒரு தகவல் மட்டுமே என்பதை மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தத் தகவல் சீட்டைக் கொண்டு மட்டும் எவரும் வாக்களிக்க இயலாது. வாக்களிக்க வரும்போது வாக்காளர் அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும்.
ஒருவேளை வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்துத் தங்களது வாக்கினைப் பதிவு செய்யலாம். ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தகம், ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்ட அந்த 12 அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து வந்து வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
