×

திருமண மண்டபங்களில் பொருட்கள் விநியோகம் செய்தால் புகார் செய்யலாம்

சிவகங்கை, ஏப்.13: திருமண மண்டபங்களில் பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்தால் மண்டப உரிமையாளர் புகார் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் சார்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதனடிப்படையில், அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டபம், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு கடை நடத்துபவர்கள் ஆகியோர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அச்சடிக்கபடும் அனைத்து போஸ்டர், துண்டு பிரசுரம், பேனர் போன்றவைகளில் உரிய அச்சகத்தின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். வாசகங்கள் எவையும் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகவோ அல்லது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையிலோ இருக்கக் கூடாது. அச்சடிக்கப்படும் நோட்டீஸ், பேனர் நகல், ஒரு உறுதி மொழி படிவத்துடன் மாவட்ட நீதிபதி, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அச்சடிக்கப்படும் நோட்டிஸ், பேனர் ஆகியவற்றின் நகல்கள் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டாலும், அதுவும் சம்பந்தப்பட்ட அச்சகத்தின் பிரசுரமாகவே கருதப்படும். திருமண மண்டபங்களில் அரசியல் சார்பான நிகழ்ச்சிகள் எனில் போலீசார் மற்றும் பிற அனுமதியை முறையாக பெற வேண்டும். அரசியல் நிகழ்ச்சிகளில் பணமோ அல்லது பரிசு பொருட்களோ விநியோகம் செய்யப்படுகிறதா என்பதனை கண்காணித்து, அவ்வாறான நிகழ்வுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

நகை அடகு கடை நடத்துபவர்கள், எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் நகை அல்லது பத்திரத்தின் பேரில் கணிசமான ரொக்க தொகையினை வழங்கிடுவதற்கு முன்னர் அவர் அரசியல் அல்லது வேட்பாளர் தொடர்புடையவரா என அறிந்து கொள்ள வேண்டும். வாக்காளர்களை கவரும் விதத்தில் டோக்கன் விநியோகத்தின் மீது பணமோ அல்லது பொருட்களையோ வழங்குதல் கூடாது.

வாக்காளர்களை கவரும் விதத்தில் ஏற்கனவே அடகு வைக்கப்பட்ட நகைகளை இலவசமாக திருப்பி தருவதோ அல்லது சிறிய நகைகளுக்கு அதிக அளவு பணம் தருவதோ கூடாது. மேற்கண்ட நிபந்தனைகளை மீறுவோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமம் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Sivaganga ,Election ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...