வருசநாடு, ஏப். 12: வருசநாடு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரத்தில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். வருசநாடு அருகே உள்ள மேகமலை வனப்பகுதி, மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, கருப்பு வெள்ளை நிறத்தில் மந்திகள், மான்கள் உள்ளிட்டவை வசிக்கின்றன.
இந்நிலையில் முறுக்கோடை, உருட்டிமேடு, மேல் வாலிப்பாறை, காந்திகிராமம் அருகுவேலி, முத்தாலம்பாறை, கருப்பையாபுரம், வாய்க்கால்பாறை, ஆத்துக்காடு, பாம்பாடும்புதூர் ஆட்டுப்பாறை, உப்புத்துறை, யானைகஜம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விளைநிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
