×

ஊளி, முறல் மீன்கள் வரத்து அதிகரிப்பு

குளத்தூர், ஏப்.12: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள கீழவைப்பார், சிப்பிகுளம் கடல் பகுதியில் கடந்த சிலவாரங்களாக மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தங்கு கடல் தொழிலுக்கு சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் வலையிலும், தினசரி கடல் தொழிலுக்கு சென்று வந்த மீனவர்கள் வலையில் ஊளி, அயல, மயில், பாறை, கட்டா போன்ற மீன்கள் வரத்து காணப்பட்டது. கடந்த வாரங்களில் மீன்கள் வரத்து குறைவாக இருந்ததினால் அதிக விலைக்கு மீன்கள் ஏலம் போனது. தற்போது பரவலாக மீன்கள் வரத்து உள்ளதால் கடந்த வாரங்களை விட மீன்கள் விலை குறைவாக இருந்தது.

ஊளி மீன்கள் கிலோ ரூ.250க்கும், குட்டி சீலா ரூ.450க்கும், முறல்வகை மீன்கள் ரூ.200க்கும் விற்பனையானது. வரத்து குறைவாக இருந்த சாலமீன்கள் 10 கிலோ கொண்ட ஒரு கூடை ரூ.800 வரை ஏலம் போனது. இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறியது, கடந்த வாரங்களில் மீன்கள் இல்லாமல் வெறுங்கையுடன் திரும்பிய மீனவர்களுக்கு இந்த வாரம் பரவலாக மீன்கள் கிடைத்துள்ளது. மேலும் சென்ற வாரம் அதிகவிலைக்கு எடுத்த மீன்கள், தற்போது கிலோவுக்கு ரூ.150வரை குறைவாகவே உள்ளது. மேலும் வரும் வாரங்களில் தங்கு கடலுக்கு செல்லும் விசைப்படகுகளுக்கு தடைகாலம் வருவதையொட்டி நாட்டுப்படகு மீனவர்களுக்கு பரவலாக மீன்கள் கிடைக்கும். இதனால் மேலும் விலைகள் குறைய வாய்ப்புள்ளது என்றனர்.

Tags : Kulathur ,Keezhavaipar ,Sippikulam ,Thoothukudi district ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...