நாகர்கோவில், ஏப்.11: தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 16-ம் தேதியுடன் இறுதித் தேர்வுகள் நிறைவடைவதைத் தொடர்ந்து, ஏப்ரல் 17-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், நடப்பு கல்வியாண்டிற்கான தேர்வுகள் முடிவடைந்த மறுதினமே மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீடு, புதிய கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காக ஏப்ரல் 25ம் தேதி பள்ளிக்கு வருகை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2026-27 ம் கல்வியாண்டிற்கான புதிய வகுப்புகள் ஜூன் 1-ம் தேதி திங்கட்கிழமை முதல் அனைத்து பள்ளிகளிலும் தொடங்கும். இருப்பினும், 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால், அந்த வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஜூன் 1 முதல் ஜூன் 3 வரை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதன் காரணமாக, 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4-ம் தேதி வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதற்கான முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
