போடி, ஏப்.10: தேனி மாவட்டம் போடி அருகே முந்தல் கிராமத்தில் குரங்கணி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (29). போடி வனத்துறையில் வேட்டை தடுப்பு பிரிவில் தற்காலிக காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வழக்கம்போல பணியை முடித்துக்கொண்டு தனது வீட்டுக்கு டூவீலரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது போடி – முந்தல் சாலையில் பரமசிவன் கோயில் பிரிவு அருகே தனது டூவீலரை சாவியுடன் நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க மறைவான இடத்திற்கு சென்றார். பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது டூவீலரை யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போடி நகர் காவல் நிலையத்தில் வடிவேல் புகார் செய்தார். இதன்பேரில் எஸ்ஐ பாலசுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வனத்துறை ஊழியரின் டூவீலரை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
