நாகப்பட்டினம், ஏப். 10: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம்தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு 16 நாள்களே உள்ளது. இந்நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் தேர்தல் திருவிழா களை கட்டியுள்ளது. தேர்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடற்கரை, பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் என பொதுமக்கள் திரளும் அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் நாகபட்டினம் மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் நாகப்பட்டினம் பிரதான கடை வீதியில் உள்ள ஜவுளிக்கடைகளில், தேர்தல் திருவிழா தமிழகத்தின் பெருவிழா, நேர்மையாக வாக்களிப்போம், தேர்தலில் வாக்களித்து நமது கடமையாற்றுவோம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வில்லைகள் கடைகளில் ஒட்டப்பட்டன.
மேலும் ஜவுளிக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுவோம் என்ற உறுதிமொழியையும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றனர். இதேபோல நாகப்பட்டினத்தில் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு வில்லைகள் ஒட்டப்பட்டன.
