நெல்லை, ஏப்.10: நெல்லை தொகுதியின் தவெக வேட்பாளராக ஆர்.எஸ்.முருகன் போட்டியிடுகிறார். அவர் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர், டவுன் நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ரதவீதிகளிலும், கடைகளில் வியாபாரிகள், பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பின்னர் அவர் பேட்டை மற்றும் பழையப் பேட்டை வரை வாகனத்தில் சென்று பிரசாரம் செய்தவர், துப்புரவு பணியாளர்கள், பழக்கடை, காய்கறிக் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் அவர்களின் அன்றாட வேலைகளையும் அவர்கள் சந்திக்கும் இடர்பாடுகளையும் கேட்டறிந்தார். மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களையும் சந்தித்து நலம் விசாரித்ததுடன் அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார்.
அப்போது அவர்கள், அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், சாலை போன்றவைகளையும், படித்த இளையோருக்கான வேலையில்லா திண்டாட்டத்தையும் வேட்பாளர் ஆர்.எஸ்.முருகனிடம் தெரிவித்தனர். அதற்கு அவர் நான் வெற்றி பெற்றால் உங்கள் குறைகளையெல்லாம் தீர்த்து வைப்பேன். அதற்காகவே தலைவர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். நானும் அவருடன் இணைந்து பணியாற்றுகிறேன். நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்ன, தரமான சாலை, தூய்மையான குடிநீர், சுத்தமான நகரம், மகளிருக்கு பாதுகாப்பு, குடும்பங்களுக்கு 6 சிலிண்டர்கள், நெல்லையில் மெட்ரோ திட்டம், தாய்மாமன் சீரான தங்க மோதிரம், ஆதரவற்றோருக்கு விலையில்லா விருந்தகங்கள் அனைத்தையும் செய்து தருவோம். தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடங்கி வேலையில்லா திண்டாட்டம் இல்லாத நெல்லையை உருவாக்குவோம் என்று தங்களது வாக்குறுதிகளை எடுத்துரைத்து, மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார். நெல்லை தொகுதி தவெக வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் இன்று (10ம்தேதி) காலை முதல் தாழையூத்து, சங்கர்நகர் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பண்டாரகுளம், அருந்ததியர் காலனி, சாரதாம்பாள் நகர், நாராயணநகர், சீனிவாசநகர், முத்துநகர், ஹவுசிங் போர்டு சோனல் 1,2,3 மற்றும் கணபதி மில், சுப்புராஜ் மில் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார்.
