நிலக்கோட்டை, ஏப். 9: நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பேரணை வைகை ஆற்றிலிருந்து உறை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்து சுத்திகரித்த பின் ராட்சச குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திண்டுக்கல், சின்னாளபட்டி, வத்தலக்குண்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் ராட்சச குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் சீறிப்பாய்ந்தது. சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக வெளியேறிய தண்ணீரால் அப்பகுதியே வெள்ளம் போல் காட்சியளித்தது.
மேலும் தண்ணீர் தேக்கத்தால் அவ்வழியாக அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில், மேட்டுப்பட்டி, குருவித்துறை, சோழவந்தான், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்ற இருசக்கர, நான்கு சக்கர வாகனஓட்டிகள் அவதியடைந்தனர். போதிய மழையின்மை காரணமாக கடும் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சமயத்தில் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாக சாலையில் ஓடிய சம்பவம் பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியதுடன் குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
