×

மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க கால்வாய்

ஓட்டப்பிடாரம், ஏப். 9: மாப்பிள்ளையூரணி தாளமுத்துநகர் பகுதியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரசாரத்தின் போது ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளர் சுந்தரராஜ் உறுதி அளித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் சுந்தரராஜ், நேற்று மாப்பிள்ளையூரணி மற்றும் தாளமுத்துநகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை அங்கிருந்த பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பொதுமக்களின் குறைகள் மற்றும் தேவைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

தொடர்ந்து வீதி, வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், மக்கள் அதிகமாக. வசிக்கும தாளமுத்துநகர் பகுதியில் மக்களின் அடிப்படை தேவையான குடிநீர், சாலை வசதி, அடிப்படை உள் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகள் இன்னும் பூர்த்தியடையாமல் உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் முன்னுரிமை அடிப்படையில் நான் வெற்றி பெற்றவுடன் முழுமையாக நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுப்பேன். குறிப்பாக மழை காலங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க கால்வாய் அமைத்து கொடுப்பேன், என்றார்.

பின்னர் மாப்பிள்ளையூரணி பகுதியில் அமமுக வேட்பாளர் சுந்தரராஜ் ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் இப்பகுதிகளில் அரசு திட்டப்பணிகள் பல செயல்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. அதிமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதும் மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். தமிழகத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன், என்றார். இதில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜவகர் மற்றும் அமமுகவினர், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags : Ottapidaram ,AMMK ,Sundararaj ,Thalamuthu Nagar ,Mappillaiurani ,National Democratic Alliance ,Ottapidaram… ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...