‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா அடுத்தடுத்த படங்களால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறார். அந்த வகையில், ‘ஜெய் பீம்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் டி.ஜே. ஞானவேலுடன் அவர் மீண்டும் இணையவுள்ள புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், தற்காலிகமாக ‘சூர்யா 48’ என அழைக்கப்படுகிறது.
திரைத்துறை வட்டாரத் தகவலின்படி, தமிழ்நாட்டின் ‘5 ரூபாய் மருத்துவர்’ எனப் போற்றப்பட்ட மறைந்த டாக்டர் திருவேங்கடம் வீரராகவனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
‘கருப்பு’ படத்தைத் தொடர்ந்து சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படத்தில், கதாநாயகியாக காயடு லோஹர் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
