×

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி டெல்லியில் பேரணி; இளைஞர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை வீச்சு: அலைஅலையாய் திரண்டவர்களை போலீசார் தாக்கியதால் பதற்றம் நாடாளுமன்றத்தின் நுழைவாயில் மூடல்: இரவிலும் தொடர்ந்த போராட்டம்

 

புதுடெல்லி: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும் மாணவர் அமைப்பினரும் இளைஞர்களும் மாணவர்களும் நாடாளுமன்றம் நோக்கி நேற்று பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் விரட்டியடித்ததால் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவியது. நாடாளுமன்ற நுழைவாயில்கள் மூடப்பட்டன. இன்டர்நெட், மெட்ரோ ரயில் நிலையங்கள் முடக்கப்பட்டன. இதனால் நாடாளுமன்ற சுற்றுப்புற பகுதிகளும், ஜந்தர்மந்தரும் போர்க்களமாக மாறியது.

நீட் வினாத்தாள் கசிவால் மறுதேர்வு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து விரக்தி அடைந்த மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில் ஏற்பட்ட குளறுபடிகளால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இத்தகைய தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, சமூக ஊடகம் மூலமாக இளைஞர்களால் உருவாக்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

கரப்பான் பூச்சி கட்சி சார்பாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர்மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை கடந்த ஜூன் 28ம் தேதி தொடங்கினார். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்க, ஜூலை 20ம் தேதி (நேற்று) நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்வதாகவும் கரப்பான் பூச்சி கட்சி அறிவித்திருந்தது. இதற்கிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு, சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக போராட்ட களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாங்சுக்கை அப்புறப்படுத்தினாலும், நாடாளுமன்றம் நோக்கிய பேரணி திட்டமிட்டபடி நடந்தே தீரும் என கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்து, தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அவர் கையில் எடுத்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வான்சுக் மீதான டெல்லி போலீசின் அடாவடி நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அதே சமயம் நாடாளுமன்றத்திற்கு வெளியே காலை 11.30 மணியில் இருந்தே திட்டமிட்டபடி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல கரப்பான் பூச்சி கட்சியினர் திரண்டனர்.

அவர்களுடன் பல்வேறு மாணவர் அமைப்பினரைச் சேர்ந்த இளைஞர்களும் இணைந்தனர். பல்வேறு நகரங்களில் இருந்து பஸ், ரயில்களில் வந்த இளைஞர்கள் முதுகில் பையுடன் நேரடியாக போராட்ட களத்திற்கு விரைந்தனர். சீருடை அணிந்த பள்ளி மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும், முதியவர்களும் திரளாக பேரணியில் கலந்து கொண்டனர். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியில் திரண்டனர். பேரணிக்கு ஏராளமானோர் வருவார்கள் என்பதை முன்கூட்டியே கணித்த போலீசார் டெல்லி முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர். சிஐஎஸ்எப் உள்ளிட்ட துணை ராணுவப் படையினரும் நாடாளுமன்றத்தை சுற்றிய பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர். அங்கு, கும்பல் கூட 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அனைத்தையும் மீறி மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை காக்க மிகுந்த தைரியத்துடன் தடைகளை தாண்டி அலைஅலையாக முன்னேறினர். முக்கிய சாலைகள் முடக்கப்பட்டிருந்ததால் சிறு தெருக்கள், குறுக்கு வழிகள் மூலமாக குழு குழுவாக பிரிந்து ஒன்று கூடினர். இதை எதிர்பார்க்காத போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். பல இடங்களில் பேரிகார்டுகளை மீறி இளைஞர்கள் முன்னேறி நாடாளுமன்றத்தையும் நெருங்கினர். போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தின் வடக்கு புறம் இருக்கும் கேட் பகுதியை நோக்கி சென்றனர்.

போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தின் உள்ளே நுழைந்து விட்டால் என்ன ஆவது என்று சுதாரித்துக் கொண்ட போலீசார் பாதுகாப்பு கருதி முதலாவதாக எச்சரிக்கை விடுக்கும் விதமாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் அதன் பின்னரும் கலைந்து செல்லவில்லை என்பதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி தந்தது. மேலும் இதனால் போராட்டக்காரர்களுக்கு கண் எரிச்சல், சுவாசப் பிரச்னை ஆகியவை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் ஆகிய இருவரும் ஒன்றிணைந்து தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது. இளைஞர்கள் பலருக்கு மண்டை உடைந்தது. பெண்கள், மாணவிகளும் விடாமல் அடித்து விரட்டப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் வடக்கு புறம் இருக்கும் கேட் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்லும் வழி ஆகியவை பாதுகாப்பின் அடிப்படையில் இழுத்து மூடப்பட்டது. இளைஞர்கள் குவிவதை தடுக்க நாடாளுமன்றத்தின் அருகில் உள்ள மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது. போராட்டக்காரர்களை ஒருவழியாக மீண்டும் ஜந்தர் மந்தர் பகுதிக்கு போலீசார் திருப்பி அனுப்பினர். இதற்கிடையே இரவிலும் மீண்டும் போராட்டம் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இளைஞர் களின் இப்பேரணி இதுவரையிலும் டெல்லியில் நடந்த போராட்டங்களை விட மிகத்தீவிரமானதாக இருந்தது. விவசாயிகள் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை விட தீவிரமாக டெல்லியின் அனைத்து பகுதிகளில் இருந்து இளைஞர்கள் திரண்டு வந்தனர். இளைஞர்களின் இந்த போராட்டம் ஒன்றிய அரசுக்கு மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த போராட்டத்தால் டெல்லி முழுவதும் பதற்றம் நிலவியது.

* கரப்பான் பூச்சி பிரதிநிதிகளுடன் நட்டா சந்திப்பு

போராட்டகாரர்கள் தரப்பை சார்ந்த நிர்வாகிகளான சவரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை நேற்று சந்தித்தனர். அப்போது அவர்கள் மூன்று முக்கிய கோரிக்கை கொண்ட கடிதத்தை அவரிடம் வழங்கினார்கள். அதில், ‘‘ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்’’ என வலியுறுத்தி உள்ளனர்.

* இளைஞர்களுக்கு எதிரான பிரதமர்: ராகுல் காந்தி கண்டனம்

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘பிரதமர் மோடி இந்திய வரலாற்றிலேயே இளைஞர்களுக்கு மிகவும் எதிரான பிரதமர் ஆவார். அந்த எந்தளவுக்கு இளைஞர்களுக்கு எதிரானவர் என்றால், தோல்வி அடைந்த கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைக் கூட அவரால் பெற முடியவில்லை. 152 முறை வினாத்தாள் கசிவு நடந்துள்ளது. 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் குற்றவாளி ஒருவருக்கு கூட தண்டனை வழங்கப்படவில்லை. தண்டனை யாருக்கு கிடைத்தது? கடினமாக உழைக்கும் இளைஞர்களுக்குதான். வினாத்தாள்களை கசியவிட்ட குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். ஆனால் நியாயமான பிரச்னைகளை எழுப்பும் மாணவர்கள் இழுத்துச் செல்லப்பட்டு தாக்கப்படுகிறார்கள். இந்த அரசு இளைஞர்களை கைவிடுவது மட்டுமல்ல, அவர்கள் மீது தாக்குதலும் நடத்துகிறது’’ என கூறி உள்ளார்.

* மெட்ரோ நிலையங்கள் மூடல்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பேரணிக்கு அதிகப்படியானோர் கூடாத வகையில் சாலைகள் இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு சென்ட்ரல் செக்கெரட்டேட், பட்டேல் சவுக், ஜன்பத் ஆகிய மூன்று மெட்ரோ நிலையங்களிலும் காலை முதலே ரயில் நிற்கவில்லை. மேலும் ரயில் நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு டெல்லி மெட்ரோ நிர்வாகத்தின் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது.

* 50 போலீசார் காயம்

பேரணியின் போது போராட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் 50க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்திருப்பதாக டெல்லி காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நாடாளுமன்ற வீதியில் தடையை மீறி டிரோன்

நாடாளுமன்ற வீதியில் போராட்டக்காரர்கள் கூடியிருப்பதாக சமூக ஊடகங்களில் டிரோன் வீடியோ காட்சிகள் பரவி வரும் நிலையில், அது குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு நிறைந்த இப்பகுதியில் டிரோன்களை இயக்க முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம்.

* போலீசார் குவிப்பு

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் நாடாளுமன்றத்தை நோக்கி செல்லும் பேரணியை தடுக்கும் விதமாக, நாடாளுமன்றம், சென்ட்ரல் செக்கெரட்டேட், பட்டேல் சவுக், ராஜூவ் சவுக், ஜன்பத் ஆகிய பகுதிகள் முழுவதும் டெல்லி போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அதேப்போன்று அந்த பகுதிகளில் போக்குவரத்தும் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை நேரத்தில் அலுவலக பணிக்கு செல்லும் ஆயிரக்காணோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

* இன்டர்நெட் துண்டிப்பு

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்திய பேரணிக்கு சாரை சாரையாக மக்கள் திரண்டனர். இருப்பினும் அதிகப்படியான கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதற்காக, பங்கேற்றவர்கள் அனைவரும் செல்போன் மூலம் பலரையும் பேரணியில் கலந்து கொள்ள அழைத்து வந்தனர். இதனால் ஜந்தர் மந்தரில் மக்கள் அதிகம் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதனை தடுக்கும் விதமாக இன்டர்நெட் சேவை முழுமையாக துண்டிக்கப்பட்டது. மேலும் செல்போன்கள் செயல்படாதவாறு ஜாமர் கருவி பொருத்தப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் மாலை முதல் மத்திய டெல்லி முழுவதும் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது.

* தலைவர்கள் கண்டனம்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவையில் பேசுகையில், ‘‘நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை எழுப்பியதற்காக மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை அரசு ஒடுக்குகிறது. தேர்வுகளை முறையாக நடத்த தெரியாத இந்த அரசு ஆட்சியில் நீடிக்க தகுதியற்றது’’ என்றார்.

காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி அளித்த பேட்டியில், ‘‘இது அபத்தமானது. அவர்கள் நம்முடைய குழந்தைகள். அவர்கள் தான் நாட்டின் எதிர்காலம். இந்த நாடாளுமன்றம் அவர்களுக்கு சொந்தமானது. இது ஒரு நியாயமான பிரச்னை. இதில் நீங்கள் விவாதிக்க தயாராக இல்லை. ஆனால் குழந்தைகள் மீது கண்ணீர்புகை குண்டு வீசுகிறீர்கள். அவர்களை தாக்குகிறீர்கள். எதற்காக?’’ என்றார்.

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் தளத்தில், ‘‘அரசியல் ஆணவத்தை கைவிட்டு இளைஞர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். நீதிகேட்டு வீதிக்கு வந்துள்ள இவர்கள் நம் நாட்டின் பிள்ளைகள்’’ என்றார்.

* கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் கைது?

கரப்பான் பூச்சி கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் எக்ஸ் தளத்தில், கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கேவை போலீசார் வலுக்கட்டாயமாக பிடித்து சென்றதாகவும், சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலியின் தலைமுடியை பிடித்து போலீசார் தாக்கியதாகவும், 12 வயது சிறுமியின் மண்டை உடைக்கப்பட்டதாகவும், மேலும் 50 பேர் மண்டை உடைக்கப்பட்டதாகவும் பதிவிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை டெல்லி காவல் துறை மறுத்தது. அபிஜித் திப்கேவை அழைத்துச் செல்லவில்லை என்றும் அவர் போராட்ட மேடையிலேயே இருந்ததாகவும் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தியது.

* கரப்பான் பூச்சியை போல மீண்டும் வருவோம்

நாடாளுமன்றம் நோக்கிய போராட்டத்தில் இளைஞர்கள் மட்டுமின்றி பல பள்ளி மாணவிகள், இளம் பெண்கள் வீட்டில் பெற்றோரிடம் பொய் சொல்விட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதாக கூறினர். பீகார், மகாராஷ்டிரா, உபி, அரியானா உள்ளிட்ட பல அண்டை மாநிலங்களில் இருந்தும் இளம்பெண்கள் தனியாக இரவு நேர பஸ் பயணம் செய்து போராட்டத்தில் கலந்து கொண்டதாக கூறினர். பலரும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் ஒன்றிணைந்துள்ளனர். இன்ஸ்டா உள்ளிட்ட சமூக ஊடக குழுக்கள் மூலம் போராட்டத்தில் இணைந்ததாக கூறி உள்ளனர்.

பீகாரின் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான கிஸ்மத் கூறுகயைில், ‘‘இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காகப் பாட்னாவிலிருந்து டெல்லிக்கு தனியாக இரவுப் பயணம் மேற்கொண்டேன். நான் என் குடும்பத்தினரிடம் பொய் சொல்லிவிட்டுத்தான் இங்கு வந்தேன். ஏனென்றால் என் பாதுகாப்பு குறித்து அவர்கள் கவலைப்பட்டிருப்பார்கள். எங்களை எவ்வளவுதான் ஒடுக்க முயன்றாலும், கோடிக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து வாழ்ந்து வரும் கரப்பான் பூச்சிகளைப் போல, நாங்கள் நம்பிக்கையை இழக்காமல் மீண்டும் வருவோம்’’ என்றார்.

Tags : Delhi ,Union ,Education Minister ,Dharmendra Pradhan ,New Delhi ,Janata Party ,Union Education Minister ,
× RELATED சிக்கிம் மாநிலத்தில் சுரங்கம்...