×

தன்னை கரைத்து, கறை நீக்கும் புனிதமான உறவு

ஒருநாள் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் ஒரு சிறிய ரப்பரை கையில் எடுத்துக் காட்டினார். “இந்த ரப்பரைப் பாருங்கள். பென்சிலால் எழுதும்போது தவறு ஏற்பட்டால், அது தன்னைத் தேய்த்துக்கொண்டு, அந்தத் தவறை அழித்து விடுகிறது. அது அழிக்கும் ஒவ்வொரு முறையும் தன்னுடைய அளவை மற்றும் அழகை இழக்கிறது. ஆனாலும், மற்றவர்களின் தவறைச் சரிசெய்வதே அதன் பணியாக இருக்கிறது” என்றார்.
மாணவர்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆசிரியர் மீண்டும் பேசினார்: “இந்த ரப்பரைப் போலத்தான் நம் பெற்றோர்களும் இருக்கிறார்கள். நாம் தவறு செய்யும்போது நம்மைத் தள்ளிவிடாமல், நம்மைத் திருத்துவதற்காக தங்கள் நேரத்தையும், சக்தியையும், வாழ்க்கையின் பல சந்தோஷங்களையும் தியாகம் செய்கிறார்கள்.”
ஒரு ரப்பர் மற்றவர்களின் தவறுகளை அழிக்கும்போது தன்னையே கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறது. அதுபோல பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தங்கள் இளமை,ஆசைகள், கனவுகள் பலவற்றை விட்டுக்கொடுக்கிறார்கள். அவர்கள் சோர்வடைந்தாலும், பிள்ளைகள் உயர வேண்டும் என்பதே அவர்களின் மகிழ்ச்சியாக இருக்கிறது.
வாழ்க்கையில் நாம் உயர்ந்த இடத்திற்கு சென்ற பிறகு, நம்மை உருவாக்கியவர்களை மறந்து விடக் கூடாது. ஒரு பெரிய மரத்தின் அழகை உலகம் பார்த்தாலும், அதைத் தாங்கி நிற்கும் வேர்களின் தியாகம் பலருக்குத் தெரியாது. பெற்றோர்கள் அந்த வேர்களைப் போன்றவர்கள்.
ரப்பர் நமக்குக் கற்றுத் தரும் தத்துவம் இதுதான்: “உண்மையான அன்பு தவறுகளை பெரிது படுத்தி, கேலி செய்வது இல்லை; மாறாக, தவறு செய்தவர்களை திருத்தி உயர்த்த முயற்சி செய்கிறது.” நம்மை நேசிப்பவர்கள் சில நேரங்களில் நம்மைக் கண்டிப்பது நம்மை காயப்படுத்த அல்ல, நம்மை நல்லவர்களாக உருவாக்குவதற்காகத்தான்.
ஆகவே பெற்றோர்களை மதிப்போம். அவர்களின் தியாகங்களை நினைவில் வைத்திருப்போம். அவர்கள் நமக்காக தேய்ந்த வாழ்க்கையை நாம் அன்பாலும், மரியாதையாலும் மகிழ்ச்சியாக மாற்றுவோம். ஏனெனில் நம் வெற்றியின் பின்னால் பல நேரங்களில் நமக்காக அமைதியாகத் தியாகம் செய்த பெற்றோர்களின் அன்பு மறைந்திருக்கிறது.
இறைமக்களே, “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; அப்பொழுது உனக்கு நன்மை உண்டாயிருக்கும், பூமியிலே நீ நீடித்த நாட்கள் வாழ்வாய்.” (எபேசியர் 6:2-3) என இறைவேதம் கூறுவதை எப்பொழுதும் உங்கள் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
– அருள்முனைவர். பெ. பெவிஸ்டன்

Tags :
× RELATED கெட்டவர்களை விட நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள் என்பதுதான் உண்மையா?