×

நவோதயா வித்யாலயா பள்ளி குறித்த வழக்கு 9ம் வகுப்பில் மும்மொழியை அறிமுகப்படுத்துவதா? உச்சநீதிமன்ற நீதிபதி கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: நவோதயா வித்யாலயா பள்ளி குறித்த வழக்கில் 9ம் வகுப்பில் மும்மொழியை அறிமுகப்படுத்துவதா என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நவோதயா பள்ளிகளை தமிழ்நாடு அரசு திறப்பதற்கு அனுமதி வழங்கி கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கடந்த திமுக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது என்பது மட்டுமில்லாமல், தமிழ்நாட்டுக்கு ஜவகர் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று பிரமாணப்பத்திரமும் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹரிப்பிரியா,’தமிழகத்தில் நவோதயா பள்ளி நிறுவுவது குறித்து உயர்மட்ட ஆலோசனைகள் நடந்து வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் முடிவெடுக்க எங்களுக்கு குறைந்தபட்சம் ஆறு வாரம் அவகாசம் வேண்டும்’ என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி பி.வி.நாகரத்னா,’அனைத்து மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் உள்ளன, தமிழகத்தில் மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வியை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்.

அதேபோன்று ஒன்றிய அரசு கொண்டு வரும் பள்ளிகளை தடுப்பது ஏன்? தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது எனவே அவர்களின் நிலைப்பாடு என்ன?. உங்களிடம் பள்ளிக்கான நிலத்தை தானே கண்டறிய கூறுகிறோம்’ என்று தெரிவித்தார். இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரியதர்ஷினி,’ ஏற்கனவே தமிழ்நாட்டில் 1500 சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு மூன்று மொழிக் கொள்கையை காரணம் காட்டுகிறது.

ஏற்கனவே பல பள்ளிகளில் மூன்று மொழிக் கொள்கை இருக்கிறது. இந்தியும் கற்று கொடுக்கப்படுகிறது.ஆனால் தமிழ்நாடு அரசு இந்தியை காரணம் காட்டி நவோதயா பள்ளிகளை நிறுவ மறுக்கிறார்கள்’ என்று தெரிவித்தார். இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட நீதிபதி பி.வி.நாகரத்னா, ‘மூன்று மொழிக் கொள்கை என்பது இந்தி மட்டும் கிடையாது. வேறு எந்த மொழியையும் கூட தேர்ந்தெடுத்து கற்றுக் கொள்ளலாமே’ என்று கேள்வியெழுப்பினார்.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் ஹரிப்ரியா,’தற்போது மும்மொழி கொள்கையை ஒன்றிய அரசு கொண்டு வந்து அமல்படுத்தியுள்ளது. அதாவது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதி பி.வி.நாகரத்னா,’ மும்மொழி கொள்கை என்பது இருக்கலாம். அது ஆறாம் வகுப்பு முதலே தொடங்க வேண்டும். ஆனால் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திடீரென மூன்று மொழிக் கொள்கையை கட்டாயமாக்குவது மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

ஒன்பதாம் வகுப்பில் மும்மொழி கொள்கையை கொண்டு வந்ததை ஒன்றிய அரசு நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் அந்த மாணவர்கள் பொதுதேர்வை எழுத இருக்கிறார்கள். அவ்வாறு இருக்கையில் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள்’ என்று கூறினார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரியதர்ஷினி,’ ஏற்கனவே மும்மொழி கொள்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தனி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன’ என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட நீதிபதி பி.வி.நாகரத்னா,’ தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா பள்ளிகள் அமைப்பது மற்றும் அதற்கான இடங்களை கண்டறிவது தொடர்பான நிலைப்பாட்டை மாநிலத்தின் புதிய அரசு தெரிவிக்க வேண்டும். இருப்பினும் அதற்காக 12 வாரங்கள் அவகாசம் கண்டிப்பாக கொடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் மூன்று வார காலத்திற்குள்ளாக தமிழக அரசின் விளக்கத்தை கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’ என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

* தமிழ்நாடு இந்தி திணிப்பை ஏற்காது
ஜவகர் நவோதயா பள்ளிகள் தொடர்பான நேற்றைய வழக்கு விசாரணையின் போது எதிர்மனுதாரருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் ஒரு விளக்கமளித்தார். அதில்,’ தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இந்தி என்ற மொழியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பை மட்டுமே எதிர்க்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.

Tags : Navothaya Vidyalaya School ,Supreme Court ,NEW DELHI ,COURT ,EU STATE ,NAVODAYA VIDYALAYA SCHOOL ,Tamil ,Nadu ,Javakar Navothaya Vidyalaya School ,Tamil Nadu ,
× RELATED ஈரானின் சிறுவர் புற்றுநோய் மருத்துவமனை அருகே அமெரிக்கத் தாக்குதல்