×

நாகர்கோவில் சிறையில் கட்டிவைத்து சித்ரவதை செய்து மாற்றுத்திறனாளி அடித்துக்கொலை: கை முறிவு; தலை, உடல் முழுவதும் 19 காயங்கள்; பிரேத பரிசோதனையில் அம்பலம்: 3 போலீசார் கைது

நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் விசாரணை கைதியான மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன் கட்டி வைத்து சித்ரவதை செய்து அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் கை முறிவு உட்பட 19 இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் அம்பலாகி உள்ளது. இதுதொடர்பாக சிறை காவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே ஈத்தங்காடு நாராயணன்புதூரை சேர்ந்தவர் சசிதரன்.

இவரது மகன் சபரி வர்மன்(34). மாற்றுத்திறனாளியான இவர், ஈத்தங்காட்டில் மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த 9ம்தேதி இவரது கடையில் சோதனை நடத்திய தென்தாமரைக்குளம் போலீசார் ,தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் இருந்ததாக கூறி சபரிவர்மனை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் அதிகாலையில் சபரிவர்மன் மயக்க நிலையில் கிடந்ததாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர்.

அங்கு பரிசோதனையில் சபரிவர்மன் உயிரிழந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தகவல் சபரிவர்மனின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர்கள், சபரிவர்மனை போலீசார் சரமாரி தாக்கி கொன்றுள்ளனர். இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அவரது மனைவிக்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என கூறி சாலைமறியலில் ஈடுபட்டனர். எஸ்பி ஸ்டாலின் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் 2வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சத்தியமூர்த்தி முன்னிலையில் சபரிவர்மனின் உடலை நேற்று பகல் 12 மணிக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழு பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பின் நீதிபதி நேற்று சிறைச்சாலையிலும் விசாரணை நடத்தினார். எஸ்பி ஸ்டாலின், நெல்லை சிறைத்துறை எஸ்பி செந்தாமரைகண்ணன் ஆகியோரும் சிறையில் கைதிகளிடமும், காவலர்களிடமும் விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்தது. அதில், சபரிவர்மன் பெட்டிக்கடையில் 5 புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றிய போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து மாலை நீதிமன்றத்தில் ஜாமீன் பெறவேண்டும் எனக்கூறி விடுவிக்கின்றனர். பின்னர் சிறுவர்களுக்கு புகையிலை விற்றதாக கூறி அவர் நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் இரு நாட்கள் எதுவும் சாப்பிடாமல் இருந்ததுடன், 12ம் தேதி இரவு 9 மணிக்கு தனது குழந்தைகளை பார்க்க வேண்டும்.

என்னை விடுவியுங்கள் எனக்கூறி அலறியதாக தெரிகிறது. அப்போது ரவுண்ட்ஸ் வந்த வார்டன் ஜெகன், சபரிவர்மனை தாக்கி சத்தம் போடாதே எனகூறி கட்டிபோட்டுள்ளார். பின்னர் சிறிதுநேரம் கழித்து சபரிவர்மனின் கட்டை அவிழ்த்து மீண்டும் தாக்கியுள்ளார். தாக்கப்பட்ட சபரிவர்மன் இரவே இறந்ததாக தெரிகிறது. அதிகாலை 5.40 மணிக்கு ரோல்காலின் போது சபரிவர்மன் மட்டும் வரவில்லை. ஜெகன் சென்று பார்த்தபோது, சபரிவர்மன் இறந்தது தெரிய வந்தது.

அடுத்து ஷிப்ட் வந்த சிவக்குமார் இதனை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இந்தநிலையில் சபரிவர்மனின் 4 பக்க பிரேதப் பரிசோதனை அறிக்கை நேற்று இரவு அவரது உறவினர்களிடம் அளிக்கப்பட்டது. இதில் அவரது உடலில் 19 இடங்களில் கடுமையான காயங்கள் இருப்பதும், அவர் சித்ரவதை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

அறிக்கையின்படி, சபரிவர்மனின் வலது முன்னங்கை மற்றும் வலது காலின் கீழ்ப்பகுதியில் கட்டி வைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அவர் சிறைக்குள் கட்டி வைத்து தாக்கப்பட்டிருப்பது, வலது கையில் பலத்த ரத்தக்கட்டு இருப்பதுடன், அங்கு எலும்பு முறிந்திருப்பதும், தோலுக்கு அடியில் பல இடங்களில் ரத்தம் உறைந்து போயிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மண்டை ஓட்டைப் பிரித்து ஆய்வு செய்தபோது, சபரிவர்மனின் உச்சந்தலையில் தடிமனான ரத்தக்கட்டும், பிடரி பகுதியில் ஆழமான காயமும் இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே சபரிவர்மனின் உறவினர்கள், அவரது உடலில் காயம் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தனர். தற்போது வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கையில் எலும்பு முறிவு உட்பட 19 காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், சபரிவர்மன் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது .

இந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும், மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அதுவரை உடலை வாங்கப்போவது இல்லை என்று கூறிவிட்டு மனைவி மற்றும் உறவினர்கள் நேற்று இரவு சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில், போஸ்ட்மார்ட்டம் அறிக்கை, மாஜிஸ்திரேட் அறிக்கை மற்றும் விசாரணையில் கிடைத்த தகவல் அடிப்படையிலும் சபரிவர்மனை அடித்து கொலை செய்த சிறை வார்டன் தேங்காப்பட்டணத்தை சேர்ந்த ஜெகன், அதனை கண்டு கொள்ளாத 2ம் நிலை காவலர் சாமியார்மடம் சிவகுமார், இரவு சிறை பொறுப்பாளராக இருந்த களக்காட்டை சேர்ந்த தலைமை சிறை காவலர் சுரேஷ் என்ற திருமலை நம்பி ஆகிய 3 பேரை நேசமணி நகர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் 3 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

* ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்காததால் கைது
ஒரு சிறிய பெட்டிக்கடையில் சில பாக்கெட்டுகள் மட்டும் குட்கா பிடிபட்டால்,பொதுவாக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அபராதம் விதித்து விடுவார்கள் அல்லது காவல் நிலையத்தில் ஜாமீன் வழங்கக்கூடிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்வார்கள்.

ஆனால், அந்த நபர் மொத்த விற்பனையாளராகவோ அல்லது பெரிய அளவில் பதுக்கி வைத்திருப்பவராகவோ இருந்தால், அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்படுவார். ஆனால் சபரிவர்மன் விஷயத்தில் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க போலீசார் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டு பேரம் பேசியுள்ளனர், அவர் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் கைது செய்து கூடுதல் பிரிவுகளை சேர்த்து ரிமாண்ட் செய்துள்ளனர்.

* அமைச்சர் தலையீடு
தவெக அரசின் அமைச்சர் ஒருவர் சபரிவர்மனை தாக்கியவர்களை கைது செய்யவோ, அவர்கள் மீது நடவடிக்கையோ உடனே எடுக்க வேண்டாம் என்று கூறியதாகவும், அதனால் காவல்துறை கையை பிசைந்து கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவேதான் அரசியல் கட்சிகள், ஊர் மக்கள் உள்ளிட்டவர்களிடம் இருந்து கணவன் உயிரிழந்த அதே ஜெயிலுக்குள் மனைவியையும், அவரது சகோதரியையும் மட்டும் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது.

Tags : Nagercoil ,Sabarivarman ,
× RELATED பித்தளை பாத்திரம் திருடச் சென்றபோது 22,...