- அம்பேத்கர்
- சேலம்
- நீலம் கலாச்சூரல் செண்டர்
- தலித் மக்கள் குடியிருப்பு
- ஒடியத்தூர், கெங்கவள்ளி, சேலம் மாவட்டம்
- திருவூர் சிலை
- டாக்டர்
- பாபசகீப் அம்பேத்கர்
சேலம்: அம்பேத்கர் சிலைக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது சமூகநீதிக்கு எதிரானது என்று நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி, ஒதியத்தூரில் தலித் மக்கள் குடியிருப்பில், இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டு சுமார் ஆறு ஆண்டுகளாகியும், சாதி, சமூக ஆதிக்க மனப்பான்மையின் காரணமாகப் பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்படாமல் இருந்தது என்பது ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புச் சாசனத்தின் அடிப்படை விழுமியங்களுக்கும் எதிரான செயலாகும்.
கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அம்பேத்கர் சிலையை ஏற்க முடியாது என்றும், அதன் திசையை மாற்ற வேண்டும் என்றும் சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த வன்னியர் மற்றும் ஊராளி கவுண்டர் சாதியினர் சிலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததாக அப்பகுதி மக்களும், மாவட்ட நிர்வாகத்தினரும் தெரிவித்தனர். மேலும், அதே பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி ஆகியோரின் சிலைகளுக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லாத நிலையில், சட்டமாமேதை பாபாசாகேப் அம்பேத்கர் சிலைக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது சட்டத்திற்கு எதிரானதோடு சமூக நீதிக்கும் குந்தகம் விளைவிக்கும் செயலாகும்.
மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி கிடைத்திருந்தபோதிலும், அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல்துறையும் நிர்வாக அமைப்புகளும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் காலம் தாழ்த்தியதாக மக்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக. 10.07.2026 அன்று இரவு சிலை திறப்பு குழுவினர் தகரத் தடுப்புகளை அகற்றி பாபாசாகேப் அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்தனர்.
மறுநாள் சொற்ப எண்ணிக்கையிலான சிலர் எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சட்டத்திற்குப் புறம்பாக நடைபெற்ற அந்த மறியல் மீது உடனடி நடவடிக்கை எடுக்காமல் ஏற்கெனவே திறக்கப்பட்டிருந்த பாபாசாகேப் அம்பேத்கர் சிலையை மீண்டும் தகரத் தடுப்புகளால் மூடும் பணியில் காவல்துறையும் வருவாய் நிர்வாகமும் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதுதான் மக்களிடையே கடும் மனவேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தலித் மக்கள் குடியிருப்பிற்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறை பெண்கள். இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் மீது வன்முறையை ஏவியதும். 15 பேரை கைது செய்து கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான வழக்குகளில் சிறையில் அடைத்ததும் கடும் கண்டனத்துக்குரியது. காவல்துறையின் இத்தகைய ஒருதலைபட்சமான செயல்பாடே இந்த வன்முறைக்கு மிக முக்கியக் காரணம். இக்குற்றச்சாட்டுகள் முழுமையான சுயாதீனமான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் கள ஆய்வு மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததுடன், சேலம் மாவட்ட ஆட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களின் கையறு நிலைமையை எடுத்துரைத்தோம்.
மேலும், நீலம் பண்பாட்டு மையம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தோம் கைது செய்யப்பட்டுள்ள 15 பேரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கர் சிலையை மாவட்ட நிர்வாகத்தின் முன்னிலையில் திறந்து வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும். காவல்துறையின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து சுயாதீனமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். சட்டத்தை அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தும் வகையில், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக நல்லிணக்கம், அரசியலமைப்புச் சாசனத்தின் மாண்பு. சமத்துவக் கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
மாவட்ட ஆட்சியரின் நடந்த சம்பவம் கவலைக்குரியது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தலைமைச் செயலாளரின் கவனத்திற்கு இவ்விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் தீர்வுகாண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
கள ஆய்வின்போது கிராமத்தின் நிலை மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. பெண்கள் மட்டுமே கிராமத்தில் இருந்தனர். ஆண்கள். இளைஞர்கள். மாணவர்கள் உள்ளிட்ட பலர் காவல்துறையின் நடவடிக்கைக்கு அச்சப்பட்டு வெளியூரில் தஞ்சமடைந்துள்ளனர் என்று மக்கள் தெரிவித்தனர். பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இன்னமும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் கண்ணீரும். பாதுகாப்பின்மையும் சமூக நீதியின் அவசியத்தை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றன.
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் சிலை என்பது வெறும் சிலை அல்ல; அது இந்திய அரசியலமைப்பு வலியுறுத்தும் சமத்துவக் கனவின் அடையாளம். அந்த அடையாளத்தை அவமதிக்கும் எந்தச் செயலாக இருந்தாலும் அது ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே பார்க்கப்பட வேண்டும்.
சட்டத்தின் ஆட்சியையும், சமூக நீதியையும், அரசியலமைப்புச் சாசனத்தின் உயரிய விழுமியங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கும் நிர்வாகத்திற்கும் உள்ளது. அந்தப் பொறுப்பை தவெக தலைமையிலான அரசு உடனடியாக நிறைவேற்றி. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டுமென நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது.
