×

பயாப்சி எடுப்பதால் புற்று நோய் தீவிரமடையுமா?

நன்றி குங்குமம் டாக்டர்

தற்காலத்தில் நமது சமூகத்திற்கு அச்சுறுத்தல் தரும் முக்கியமான தொற்றா நோயாக உருவெடுத்து வருவது “புற்று நோய்” என்றால் அது மிகையாகாது. புற்றுநோயைப் பொருத்தவரை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது என்பது நோயை குணப்படுத்துவதில் பெரும்பங்காற்றுகிறது. ஆறாத புண்கள், திடீரென வளரும் கட்டிகள், திடீரென சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியன புற்று நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

இத்தகைய சந்தேகத்திற்குரிய புண்கள், கட்டிகள் ஆகிய இடங்களில் இருந்தும் திசுக்களில், செல்களில், திரவங்களில் இருந்து சிறிய அளவில் மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி , நோயின் தன்மையைக் கண்டறிவதில் முக்கியப் பங்காற்றும் பரிசோதனையாக இருப்பது “பயாப்சி” (BIOPSY) ஆகும்.பயாப்சி மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்பட்டுள்ள புண் மற்றும் கட்டிக்குக் காரணம் –

*புற்று நோயா?(Cancer)

*கிருமித் தொற்றா?(Infection)

*அழற்சி நிலையா?( Inflammation)

என்பதை அறிவதற்கு “பயாப்சி” மிக முக்கியமான பரிசோதனையாக இருக்கிறது.

பயாப்சி வகைகள்

ஊசி மூலம் எடுக்கப்படும் பயாப்சி, கட்டியின் ஒரு சிறு துண்டுப் பகுதியை மட்டும் எடுக்கும் பயாப்சி,
கட்டியை முழுவதுமாக நீக்கி பரிசோதனைக்கு அனுப்பும் பயாப்சி என்று பல வகைகளில் பயாப்சி செய்யப்படுகிறது.

புற்று நோய் கண்டறிதல் அன்றி தன்னெதிர்ப்பு சிறுநீரக நோய்களிலும், கல்லீரல் அழற்சி நோய்களிலும், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டவர்களில் உறுப்பின் நலன் குறித்து அறியவும் பயாப்சி உதவுகிறது.

பயாப்சியில் என்ன செய்யப்படுகிறது?

சந்தேகிக்கப்படும் பகுதியில் இருந்து எடுக்கப்படும் சிறு திசுத்திரளில் உள்ள செல்களின் அமைப்பை ஃபார்மலின் கொண்டு நிலைநிறுத்தி(FIXATION), மெழுகில் அந்தத் திசுத்திரளைப் புகுத்தி(EMBEDDING) – திடமான மெழுகு உருளை உருவாக்கி, அந்த உருளையை நுண்ணிய அளவில் வெட்டிப் பிரித்து(SECTIONING) , கண்ணாடித் தகடில் கிடத்தி பிறகு தேவையான சாயங்களை ஏற்றி(STAINING) நுண்ணோக்கி வழியாக செல்களை ஆராய்ந்து நோற்குறியியல் மருத்துவ வல்லுனர்கள் (PATHOLOGISTS) அந்த மாதிரியில் இருப்பது என்ன வகையான நோய் ( புற்று நோயா? கிருமித் தொற்றா? அழற்சியா?) என்பதை ஆராய்ந்து கூறுவார்கள்.

புற்று நோயாக இருப்பின் அந்த நோயை வகைப்படுத்துதலுக்கும் (TYPING) நோயின் நிலையை ( GRADING) கண்டறியவும் உதவுகிறது. புற்றுநோயை சரியாக வகைப்படுத்துதலும் அதன் நிலையை அறிதலும் அதன் சிகிச்சையில் முக்கியப் பங்காற்றுகிறது. நவீன மருத்துவத்தின் தற்போதைய முன்னேற்றத்தில், பயாப்சி எடுக்கப்படும் மாதிரிகளில் இம்யூனோ ஹிஸ்டோ கெமிஸ்ட்ரி (IHC) மற்றும் அடுத்த தலைமுறை பகுப்பாய்வு (NEXT GENERATION SEQUENCING) பரிசோதனை மூலம் புற்று நோய் செல்கள் வெளிப்படுத்தும் புரதங்கள் மற்றும் எதிர்ப்புச் சக்தி காரணிகளைக் கொண்டு புற்று நோயை துல்லியமாக வகைப்படுத்த முடிகிறது.

இதன் மூலமாக புற்றுநோய்க்கு எதிரான துல்லியமான எதிர் சிகிச்சையை மருத்துவ வல்லுனர்கள் திட்டமிட முடிகிறது. இந்நிலையில், பயாப்சி எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டால் பயாப்சி மூலம் புற்றுநோய் பரவிவிடும் என்றும் தீவிரமடைந்துவிடும் என்றும் அஞ்சி, நோய் கண்டறிதலையும் சிகிச்சையையும் தாமதப்படுத்தும் போக்கைக் காண முடிகிறது. பயாப்சி என்பது பெரிதாக வலி ஏதுமில்லாமல், பாதுகாப்பான முறையில், அச்சுறுத்தலின்றி செய்யப்படும் பரிசோதனையாகும். பயாப்சி மூலம் புற்றுநோய் பரவலோ தீவிரமடைதலோ நிகழ்வதில்லை.

2015 ஆம் ஆண்டு மாயோ கிளினிக் நடத்திய ஆராய்ச்சியில் பங்கு கொண்ட 2000 கணையப் புற்றுநோயாளிகளில் பயாப்சி எடுத்ததன் மூலம் நோய் தீவிரமடையவில்லை மாறாக ஆரம்ப நிலையில் பயாப்சி எடுத்துக்கொண்ட நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைப் பலன் கிடைத்தது உறுதிசெய்யப்பட்டது.

பயாப்சிகள் பெரும்பாலும் உள்நோயாளியாக அட்மிஷன் தேவைப்படாத, புறநோயாளிகள் பிரிவு சிகிச்சையாகவே வழங்கப்படுவதால் இதற்கென தனி மெனக்கெடல் தேவையில்லை. பயாப்சி பரிந்துரைக்கப்படுவதாலேயே ஒருவருக்கு புற்றுநோய் இருக்கிறது என்றும் அர்த்தம் கொள்ளவேண்டியதில்லை. பயாப்சி என்பது மேமோகிராம், சிடி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்ட அசாதாரண கட்டிகளைத் துல்லியமாக ஆராய்ந்து கூறும் முக்கிய பரிசோதனை. இந்தப் பரிசோதனை மூலம் புற்று நோய் என்றும் , சாதாரண கட்டி என்றும் முடிவுகள் வரலாம்.

எனக்குத் தெரிந்த ஒரு நபருக்கு, அவரது முதுகு தண்டுவடப் பகுதியில் கட்டி ஏற்பட்டு அவரது நடையில் பாதிப்பு ஏற்பட்டது. எம் ஆர் ஐ ஸ்கேன் செய்ததில் அவருக்குத் தண்டுவட எலும்புப் பகுதியில் கட்டி இருந்தது தெரியவந்தது. ஆரம்பத்தில் புற்றுக் கட்டியோ என்று அச்சம்கொண்டிருந்தாலும் அதற்கடுத்து பெட் ஸ்கேன் (PET) எடுக்கப்பட்டு அந்த சந்தேகம் குறைந்து, பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டியை பயாப்சி பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகு அவருக்கு ஏற்பட்டது தண்டுவட எலும்புப் பகுதியை தாக்கும் காச நோய் தொற்று என்பதை அறிய முடிந்தது. இதன் மூலம் அவருக்கு காச நோய் தொற்றுக்கான சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் வாழ்ந்து வருகிறார்.

இவ்வாறு நாள்தோறும் பயாப்சி பரிசோதனை பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை ஏற்றிக் கொண்டிருப்பது திண்ணம். புற்றுநோயைப் பொருத்தவரை ஆரம்ப நிலையில் கண்டறிவது மிக மிக முக்கியம். அந்த ஆரம்ப நிலை நோய் கண்டறிதலில் நமக்கு உற்ற தோழனாக விளங்குவது “பயாப்சி” பரிசோதனை. எனவே, பயாப்சி பரிந்துரைக்கப்படுபவர்கள் அச்சமின்றி தயக்கமின்றி விரைந்து அந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தொகுப்பு: பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா 

Tags : Dr. ,Kunkuma ,
× RELATED கொழு கொழு கொலஸ்ட்ரால்… கெடுதியா? நல்லதா?