×

கரூரில் 31 பேருக்கு அரசுப்பணி வழங்கிய விவகாரம்; போட்டித் தேர்வுக்கு தயாராகும் பல லட்சம் தேர்வர்கள் கொந்தளிப்பு: தவெக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு

சென்னை: கரூரில் 31 பேருக்கு விதிகளுக்கு புறம்பாக அரசுப்பணி வழங்கியதற்கு எதிராக போட்டித் தேர்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூரில் நடந்த விஜய் பங்கேற்ற தவெக கட்சி பொதுக்கூட்டத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். தொடர்ந்து நடந்த பேரவை தேர்தல் வெற்றியால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வரானார். இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு வருவாய், பள்ளி கல்வி, போலீஸ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட அரசுப்பணிகளுக்கான தற்காலிக நியமன ஆணைகளை நேற்று தமிழக முதல்வர் விஜய் வழங்கினார். தகுதித் தேர்வுகளை முறைப்படி எழுதி தங்களின் வாய்ப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான தேர்வர்களை வஞ்சிக்கும் வகையில், இந்த நியமனங்கள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசுப்பணி நியமனங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்பது சட்டவிதி ஆகும். குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதி, கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்காக லட்சக்கணக்கான ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த தேர்வர்கள் இரவு பகலாக படித்து வருகின்றனர். இத்தகைய கடினமான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களின் உழைப்பை விஜய் அரசு கொச்சைப்படுத்தியுள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முறையான தகுதித் தேர்வுகள் ஏதுமின்றி, அரசியல் காரணங்களுக்காக அரசு வேலைகளை இழப்பீடாக வழங்குவது தவறான முன்னுதாரணம் என போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் ஆவேசமடைந்துள்ளனர். ‘அரசுப் பணிகளை தங்களின் அரசியல் லாபத்திற்காக விஜய் அரசு தாரை வார்த்துள்ளது’ என்று குற்றம் சாட்டும் தேர்வர்கள், தங்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் இத்தகைய முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கவும் முடிவு செய்துள்ளனர். விஜய் அரசின் இந்த தன்னிச்சையான உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பணி நியமனங்களை தற்காலிகமாக வழங்க அனுமதித்த போதிலும், இந்த நியமனங்கள் அனைத்தும் வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்ற அதிரடி நிபந்தனையை விதித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலாளருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த அரசுப்பணிகள் சட்டப்பூர்வமாக நிரந்தரமற்ற நிலையில் இருப்பதால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. பொதுமக்களின் வரிப்பணத்திலும், தகுதி வாய்ந்த ஏழை தேர்வர்களின் உரிமைகளை பறித்தும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அரங்கேற்றியுள்ள இந்த நாடகம் இளைஞர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசு வேலைக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் 65 முதல் 75 லட்சம் வரையிலான பதிவு செய்த இளைஞர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்களின் மூப்பை பாதுகாத்து வரும் தகுதியான பல லட்சம் இளைஞர்களை புறந்தள்ளிவிட்டு, விதிகளை மீறி தற்காலிகப் பணியிடங்களை வழங்கிய சம்பவம் தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Karur ,Daveka ,Chennai ,Daweka Party General Meeting ,Vijay ,
× RELATED இமாச்சலில் கனமழையால் நிலச்சரிவு;...