×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் செப்டம்பர், அக்டோபரில் நடக்கிறது

 

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்தாண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடைபெறுகிறது. திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகை சுதர்ம கூட்ட அரங்கில் இணை செயல் அதிகாரி ஏ.சரத், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா மற்றும் சிவிஎஸ்ஓ முரளிகிருஷ்ணா மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பங்கேற்ற ஆய்வுகூட்டம் நேற்று நடந்தது. இதில் அப்போது கூடுதல் செயல் அதிகாரி பேசுகையில், இந்தாண்டு ஏழுமலையான் கோயிலில் 2 பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளது. அதன்படி வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 14-9-2026ம்தேதி அங்குரார்ப்பணம் 15-9-2026ம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23.9.2026ம்தேதி வரை தினமும் காலையிலும் இரவிலும் தொடர்ந்து சுவாமி உற்சவங்கள் பல்வேறு வாகனங்களில் நடைபெறும்.

பிரம்மோற்சவ நாட்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு முக்கிய பிரமுகர்கள் தவிர விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்படுகின்றன. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், 1 வயது குழந்தைகளின் பெற்றோர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தரிசன வரிசைகள், நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் மற்றும் முக்கியப் பகுதிகளில் பக்தர்களுக்கு அதிக அளவில் பிரசாதம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது என்றார்.

இதைத்தொடர்ந்து அக்டோபர் 11ம்தேதி 2வதாக நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2 பிரம்மோற்சவங்கள் நடப்பது வழக்கம். அதன்படி ஆண்டுதோறும் நடப்பது வருடாந்திர பிரம்மோற்சவம் என்றும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது நவராத்திரி பிரம்மோற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது.

24 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 70,141 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 33,821 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயிலில் உள்ள உண்டியல்களில் ரூ.4.23 கோடி காணிக்கை கிடைத்துள்ளது. பக்தர்களுக்கு 4.05 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 2.62 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சிலா தோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுவாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் ஆகும். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரமும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 7 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

Tags : 2 Brahmotsavams ,Tirupati Ezhumalaiyan Temple ,Tirumalai ,A. Sarath ,Venkaiah ,CVSO ,Muralikrishna ,
× RELATED உஸ்பெகிஸ்தானில் கொலையான மருத்துவ மாணவி உடல் கேரளாவில் தகனம்