×

விதிகளை மீறி கூடுதல் சுவையூட்டி சேர்ப்பு; மதுபான நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: உணவு பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை

 

புதுடெல்லி: மதுபானங்களின் தரம் குறித்த தவறான விளம்பரங்கள் தொடர்பாக உற்பத்தியாளர்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (மதுபானங்கள்) ஒழுங்குமுறைகள் மற்றும் 2006ம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் ஆகியவற்றின் கீழ் பிராந்தி, ஜின், ரம், வோட்கா மற்றும் விஸ்கி போன்ற மதுபானங்கள், அவற்றின் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் இருந்து மட்டுமே இயற்கையான சுவையைப் பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

ஆனால், சில நிறுவனங்கள் அனுமதிக்கப்படாத கூடுதல் சுவையூட்டிகளைப் பயன்படுத்தியதாகவும், மதுபானத்தின் உண்மையான வயதை மறைத்து பழமையானது என நுகர்வோரை ஏமாற்றும் வகையில் லேபிள்களை ஒட்டியதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வரும் 14ம் தேதி மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் துறை சார்ந்த கூட்டமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்கிடையே, இந்திய மதுபான நிறுவனங்களின் கூட்டமைப்பு, ‘எங்களது உறுப்பினர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளை முறையாகப் பின்பற்றுகின்றனர்’ என்று தெரிவித்துள்ளது. தவறான விளம்பரங்கள் மற்றும் விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags : Food Safety Authority ,NEW DELHI ,FOOD SAFETY AND GRADING COMMISSION OF INDIA ,
× RELATED அரியானாவில் பயங்கரம்: தொழிலதிபரின்...