காந்திநகர்: குஜராத்தின் போர்பந்தரில் இருந்து இந்திய கடற்படையின் அதிநவீன திரிஷ்டி-10 ஸ்டார்லைன் ரக ஆளில்லா விமானம் நேற்று வழக்கமான பயிற்சிக்காக ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டது. அப்போது இந்த ஆளில்லா விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரம்பூர் கிராமத்தின் அருகே உள்ள நேஷ் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதன் சத்தம் கேட்டு அப்பகுதி கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். தகவலறிந்து இந்திய கடற்படையின் தொழில்நுட்ப வல்லுநர்கள், உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அப்பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமா, திடீர் வானிலை மாற்றமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து கடற்படையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தின் சிதைந்த பாகங்களை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக இந்திய கடற்படை அதிகாரிகள் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். விபத்துக்குள்ளான ஆளில்லா விமானம், இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த விமானம் நடுத்தர உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் திறன் கொண்டதாகும்.
இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பத்துடன் அதானி டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் ஐதராபாத்தில் 70 சதவீத உள்நாட்டு உதிரிபாகங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது இந்திய ராணுவத்தின் உளவு மற்றும் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இது தரைக்கு திரும்பாமல் தொடர்ந்து 36 மணி நேரம் விண்ணில் பறக்கும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 450 கிலோ எடையை சுமந்து கொண்டு செல்லத்தக்கது.
