×

உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் ரெட்ரோ வாக்கிங்!

நன்றி குங்குமம் தோழி

ரெட்ரோ வாக்கிங் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு எளிய, அதே சமயம் சக்திவாய்ந்த பயிற்சியாகும். நாம் வழக்கமாக நடப்பது போல முன்னோக்கி நடக்காமல், பின்னோக்கி நடப்பதே ரெட்ரோ வாக்கிங். உடற்பயிற்சி மற்றும் மருத்துவ உலகில் பின்னோக்கி நடக்கும் பயிற்சிக்கு இப்போது பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. நமது அன்றாட நடைப்பயிற்சியில் சில நிமிடங்கள் பின்னோக்கி நடப்பதையும் சேர்த்துக்கொண்டால், அது உடலுக்கு வியக்கத்தக்க நன்மைகளை தரும். அவை என்னென்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

1. மூட்டுகளின் ஆரோக்கியம்

முன்னோக்கி நடக்கும்போது முழங்கால்களில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. ஆனால், பின்னோக்கி நடக்கும் போது முழங்கால் மூட்டுகளின் மீதான அழுத்தம் கணிசமாகக் குறைகிறது. இதனால் முழங்கால் வலி, கீழ்வாதம் மற்றும் மூட்டுத் தேய்மானம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த உடற்பயிற்சியாக அமைகிறது. இது மூட்டுகளை சுற்றியுள்ள தசைகளை வலுவாக்கி, மூட்டு வலியை இயற்கையாகவே குறைக்கிறது.

2. தசைகளின் வலிமை

வழக்கமான நடைப்பயிற்சி சில குறிப்பிட்ட தசைகளுக்கு மட்டுமே அதிக வேலை தருகிறது. ஆனால், ரெட்ரோ வாக்கிங் செய்யும் போது, நாம் சாதாரணமாகப் பயன்படுத்தாத தொடையின் பின்பகுதி தசைகள் மற்றும் கணுக்கால் தசைகள் நன்றாக வேலை செய்யும். இது கால்களின் அனைத்து தசைகளையும் சமமாக வலுவூட்ட உதவுகிறது. மேலும், தண்டுவடத்தை நேராக வைத்திருக்க உதவுவதால், முதுகு வலி உள்ளவர்களுக்கும் இது நல்ல பலனை தரும்.

3. மூளைத்திறன் அதிகரிப்பு

பின்னோக்கி நடப்பது, மூளைக்கு ஒரு சவால். நாம் எங்கு கால் வைக்கிறோம் என்பதைப் பார்க்க முடியாது என்பதால், மூளை மிகவும் விழிப்புடன் செயல்படும். இது உடலின் சமநிலையை பராமரிக்கும் திறனை மேம்படுத்துகிறது. நரம்பியல் மண்டலத்தைத் தூண்டி, மூளையின் அறிவாற்றல் திறன் மற்றும் கவனச்சிதறல் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

4. அதிகப்படியான கலோரிகள் எரிப்பு

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ரெட்ரோ வாக்கிங் சிறந்தது. பின்னோக்கி நடக்கும்போது உடல் அதிக ஆற்றலைச் செலவிடுகிறது. இதனால் இதயத் துடிப்பு அதிகரித்து, குறுகிய நேரத்தில் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகின்றன. சாதாரண நடைப்பயிற்சியை விட இது 40% கூடுதல் பலனைத் தரும்.

5. விளையாட்டு மேம்பாடு

விளையாட்டு வீரர்களுக்கு ரெட்ரோ வாக்கிங் ஒரு சிறந்த கிராஸ்-டிரெய்னிங் பயிற்சி. இது கணுக்கால்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும். திடீரென திசையை மாற்றி ஓடவும், உடலை உடனடியாகச் சமநிலைப்படுத்தவும் இந்தப் பயிற்சி உதவுகிறது. காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் இது குறைக்கிறது.

பாதுகாப்பு வழிமுறைகள்…

ரெட்ரோ வாக்கிங் பயிற்சியை முதன்முதலில் தொடங்கும்போது, சமமான தரைப்பகுதி அல்லது பூங்காக்களை தேர்வு செய்யவும். ஆரம்பத்தில் மெதுவாகத் தொடங்கி, பழக்கப்பட்ட பின் வேகத்தை அதிகரிக்கலாம். அருகில் யாரும் இல்லாத பாதுகாப்பான இடமாக தேர்வு செய்யலாம். தினமும் காலை அல்லது மாலை 30 நிமிட நடைப்பயிற்சியில், ஒரு 5 முதல் 10 நிமிடங்கள் பின்னோக்கி நடக்கும் பயிற்சிக்கு ஒதுக்கலாம். இந்த சிறிய மாற்றம் ஒருவரை நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும்.

தொகுப்பு: எஸ்.விஜயலட்சுமி, ஈரோடு.

 

Tags : Dozhi ,
× RELATED ஒருங்கிணைந்த முதியோர் சிகிச்சையே தேவை!