×

58 பணியிடங்களில் 40 பணியிடம் நீண்ட நாட்களாக காலி; மாநகராட்சியில் பொறியாளர்கள் பற்றாக்குறை: ஒரே நேரத்தில் 4 துறைகளை கவனிப்பதால் கடும் மன உளைச்சல் ஏற்படுவதாக புலம்பல்

 

சென்னை: சென்னை மாநகராட்சியில் கண்காணிப்பு பொறியாளர்கள் முதல் இளநிலைப் பொறியாளர்கள் வரையிலான முக்கியப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதன் காரணமாக, தற்போது பணியில் இருக்கும் அதிகாரிகள் கடுமையான பணிச்சுமைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. சென்னை மாநகராட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் பணிகளை மேற்கொள்வதற்காக கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் என பல்வேறு நிலைகளில் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் மட்டும் உதவி செயற்பொறியாளர் பிரிவில் மொத்தம் 58 பணியிடங்கள் உள்ள நிலையில், தற்போது வெறும் 18 பேர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். மீதமுள்ள 40 பணியிடங்கள் நீண்ட நாட்களாகக் காலியாகவே கிடக்கின்றன. சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் தலா ஒரு உதவிப் பொறியாளர் வீதம் மொத்தம் 200 பணியிடங்கள் இருக்க வேண்டும். இது தவிர மின்சாரத்துறை, கட்டிடத் துறை, திட்டப்பணிகள் துறை, சிறப்புப் பணிகள் துறை, மழைநீர் வடிகால் துறை, பாலங்கள் துறை, சாலைத் துறை உள்ளிட்ட 9க்கும் மேற்பட்ட உட்கோட்ட துறைகள் மாநகராட்சியில் இயங்கி வருகின்றன.

உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட துறையில் செயற்பொறியாளர் தலைமையின் கீழ் 12 உதவிச் செயற்பொறியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில், தற்போது வெறும் 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். உதவிப் பொறியாளர் பிரிவில் 120க்கும் மேற்பட்ட இடங்களும், இளநிலைப் பொறியாளர் பிரிவில் 80க்கும் மேற்பட்ட இடங்களும் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. பல மண்டலங்களில் செயற்பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், போதிய அனுபவம் இல்லாத உதவிப் பொறியாளர்கள் தற்காலிகமாகச் செயற்பொறியாளர்களாக நியமிக்கப்பட்டு பணிகளை கவனித்து வருகின்றனர். தற்போது பருவமழை காலம் வரவுள்ளதால் அதிகாரிகள் தேவை உள்ளது, இந்த சூழலில் வெறும் சொற்ப எண்ணிக்கையில் அதிகாரிகளை வைத்துக் கொண்டு பணிகளை நடத்த முடியாது.

இந்த கடுமையான பணியாளர் பற்றாக்குறை காரணமாக, தற்போது பணியில் இருக்கும் அதிகாரிகள் தங்களின் எண்ணிக்கைக்கு அதிகமான துறைகளைக் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வருகின்றனர். இதனால், செயற்பொறியாளர்கள் ஒரே நேரத்தில் 3 முதல் 4 வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அனைத்துத் துறைகளிலும் ஒரே நேரத்தில் விவரங்கள் மற்றும் அறிக்கைகள் கேட்கப்படுவதால், கடுமையான பணிச்சுமை ஏற்பட்டு தவிப்பதாக அதிகாரிகள் புலம்பித் தவிக்கின்றனர். மேலும், இத்தகைய அதீத பணிச்சுமையால் அதிகாரிகளுக்குப் போதிய விடுமுறைகள் கூடக் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

மாநகராட்சியின் உள்கட்டமைப்புப் பணிகள் தொய்வின்றி நடப்பதற்கும், அதிகாரிகளின் மன நலனைக் காப்பதற்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும். பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் இந்த காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி அல்லது உரிய தேர்வுகள் மூலம் முழுமையாக, விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் மற்றும் ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Chennai ,
× RELATED பீகார், ம.பி., குஜராத்தில் 3...