சென்னை: கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அன்வர் ராஜா, ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 324 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் முகமது ஜலீல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அன்வர் ராஜா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தல் வழக்கை நிராகரிக்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின் 2019, 2024ம் ஆண்டுகளில் தேர்தல்கள் முடிந்துள்ள சூழலில் இந்த வழக்கை விசாரிப்பதால் எந்த பயனும் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்தது.
மேலும், சட்டப்படி உயர்நீதிமன்றம், அடுத்த கட்ட உத்தரவுகளை பிறப்பிக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அன்வர் ராஜாவுக்கு எதிரான தேர்தல் வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மேற்கோள்காட்டி திமுக வேட்பாளர் முகமது ஜலீல் தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
