மதுரை: நெல்லையில் 3 சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் 3 சிறுமிகளை மிரட்டிபாலியல் தொல்லை கொடுத்ததாக மேலப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்த சேகர்(40) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்றம் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அளித்தது.
இந்த தூக்கு தண்டனைய உறுதி செய்ய தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த மாதம் நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு தொடர்ந்து விசாரணை செய்தது. இந்த வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் குற்றவாளி உடலுக்கு எடிராக மட்டுமல்லாமல் 3 ஆன்மாக்களுக்கு எதிராக திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தியுள்ளார். இது போன்ற குற்றங்களுக்கு இரக்கம் காட்டுவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். குழந்தைகளின் உணர்வுகளை மலிவாக கருதி, குற்றவாளி சிறையில் மீதி காலத்தை கழிப்பதை கோர்ட் விரும்பவில்லை. எனவே விசாரணை நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை நாங்கள் உறுதி செய்கிறோம். குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது சமூகத்தி ஒழுக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சி. இந்த தீர்ப்பு முன்னுதாரணமாகவும், குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையாகவும் அமைய வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மேலும் நீதிமன்ற பதிவாளர் உத்தரவு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களில் இருந்தும் குழந்தைகள் அடையாளங்களை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
